பி.எஃப். வட்டி உயர்வு முடிவு ஒத்திவைப்பு!

சனி, 5 ஜூலை 2008 (18:53 IST)
இ.பி.எஃப். எனப்படும் தொழிலாளர் சேம நல நிதிக்கு வட்டியை உயர்த்துவதில் எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை.

புதுடெல்லியில் இன்று தொழிலாளர் சேம நல நிதி இயக்குநர்களின் கூட்டம் நடைபெற்றது.

இதில் தொழிலாளர்கள் தரப்பு இயக்குநர்கள் சேம நல நிதி, சிறப்பு வைப்பு நிதி உட்பட தொழிலாளர்கள் சேமிக்கும் பணத்திற்கு வழங்கப்படும் வட்டியை அதிகரிக்க வேண்டும் என்று கோரினர்.

இதற்கு பதிலளித்த தொழிலாளர் துறை அமைச்சர் ஆஸ்கர் பெர்ணான்டஸ், வட்டியை உயர்த்துவது பற்றி பிரதமரிடம் ஆலோசிக்க வேண்டியதுள்ளது என்று தெரிவித்தார்.

இதனால் வட்டி உயர்வு பற்றி எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை.

தற்போது 20 பேருக்கு மேல் வேலை செய்யும் நிறுவனங்களில் உள்ளவர்களுக்கு மட்டுமே தொழிலாளர் வைப்பு நிதி பிடித்தம் செய்யப்படுகிறது.

இனி 10 பேருக்கு மேல் வேலை செய்யும் நிறுவனங்களுக்கும் தொழிலாளர் சேம நல நிதி சட்டம் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான சட்ட திருத்தம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும்.

தொழிலாளர் சேம நல நிதியில் 4 கோடியே 20 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் பணத்தை சேமிக்கின்றனர். இதற்கு 8.5 விழுக்காடு வட்டி வழங்கப்படுகிறது.

பி.எஃப். திட்டத்தில் ரூ.1 லட்சத்து 21 ஆயிரம் கோடி சிறப்பு வைப்பு நிதி கணக்கில் உள்ளது.

இதில் உள்ள மொத்த நிதியில் 80 விழுக்காடு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பி.எஃப். சார்பிலும், மற்றவை தனியார் சேமநல நிதிகளும் வைப்பு நிதியாக போட்டுள்ளன.


சி.ஐ.டி.யூ., பாரதிய மஸ்தூர் சங்கம், ஹிந்த் மஸ்தூர் சபா ஆகிய தொழிற் சங்கத்தைச் சேர்ந்த இயக்குநர்கள் வட்டியை 9.5 விழுக்காடாக உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

வட்டியை உயர்த்துவது பற்றி விவாதிக்க பிரதமர் மன்மோகன் சிங்குடனான கூட்டத்தை விரைவில் ஏற்பாடு செய்யும் படி கூறினார்கள்.

ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்க செயலாளர் டி.எல்.சத்தேவா, இந்த வட்டியை படிப்படியாக 12 விழுக்காடாக அதிகரிக்க வேண்டும் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பி.எஃப். இயக்குநர் குழுவில் 43 இயக்குநர்கள் உள்ளனர். மத்திய, மாநில அரசு சார்பிலும், தொழிலாளர் சார்பிலும் இயக்குநர்கள் இடம் பெற்று உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்