பணவீக்கம்- அரசு ‌விள‌ம்ப‌ர‌ம்!

சனி, 5 ஜூலை 2008 (16:00 IST)
உணவு உட்பட பல்வேறு பொருட்களின் விலை அதிகரிப்பதால், பணவீக்கம் அதிகரித்து வருகிறது.

இதற்கு பொது மக்களிடம் விளக்கம் அளிக்கும் வகையில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு விளம்பரங்களை வெளியிட உள்ளது.

இந்த விளம்பரம் பணவீக்கம் அதிகரித்துள்ள மற்ற நாடுகளின் விபரங்களை எடுத்துக் காட்டும் வகையில் இருக்கும். மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவைச் சேர்ந்தவர்கள் பணவீக்கத்தால் அதிக அளவு பாதிக்க‌படவில்லை என்பதை விளக்கும்.

இந்த விளம்பரங்களை பத்திரிக்கைகள், தொலைகாட்சியில் வெளியிட, அமைச்சரவை செயலாளர் கே.எம். சந்திரசேகர் தலைமையில் நடந்த, துறை செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்த கூட்டத்தில் உருக்கு, உணவு, வர்த்தகம், உரம், நுகர்வோர் நலன், தொழில் கொள்கை மற்றும் ஊக்குவிப்பு உட்பட பல்வேறு துறைகள், வெளியிட வேண்டிய விளம்பரங்களையும், தொலைகாட்சியில் ஒளிபரப்ப வேண்டிய தகவல்கள் குறித்து தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

இந்த விளம்பரங்களில் இந்தியாவின் பணவீக்க அளவிற்கும், சீனா, பாகிஸ்தான், இலங்கை, வியட்நாம், இந்தோனேஷியா போன்ற நாடுகளில் உள்ள பணவீக்கம் பற்றிய தகவல் இடம் பெற்று இருக்க வேண்டும். இந்தியாவைவிட மற்ற ஆசிய நாடுகளில் பணவீக்கம் அதிகமாக இருக்கின்றது. உதாரணமாக இலங்கையில் 27 விழுக்காடாக உள்ளது. இது மாதிரியான தகவல்கள் விளம்பரத்தில் இடம் பெற்று இருக்கும்.

அடுத்த பத்து மாதத்திற்குள் நாடாளுமன்றத்திற்கும், ஏழு மாநில சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.

ஏற்கனவே நடந்த கர்நாடகா, உத்தரகாண்ட், உத்தரபிரதசம், இமா‌ச்சல பிரதேசம், பஞ்சாப் மாநில சட்ட மன்றங்களுக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை சந்தித்தது. இந்த தேர்தல்களில் பாரதிய ஜனதா விலைவாசி உயர்வை முக்கிய பிரச்சனையாக பிரச்சாரம் செய்தது.

மத்திய அரசு இந்த விளம்பரங்களினால் பலன் கிடைக்கும் என்று கருதும் அதே நேரத்தில், மத்திய அரசின் ஒரு துறை செயலாளர், மற்ற நாடுகளின் விலையை பற்றி, இங்குள்ளவர் ஏன் கவலைப்பட வேண்டும். தான் பாதிக்கப்பட கூடாது என்று தான் கருதுவார். பல கோடி ரூபாய் செலவில் செய்யப்படும் இந்த விளம்பரங்களால், விளம்பர நிறுவனங்கள்தான் பலன் அடைவார்கள் என்று கருத்து தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்