பங்குச் சந்தை மதிப்பு 39% சரிவு!

வியாழன், 3 ஜூலை 2008 (14:07 IST)
இந்த வருட தொடக்கத்தில் பங்குச் சந்தை ஆரோக்கியமானதாக இருந்தது. இது வரை இல்லாத அளவு அதிகரித்து ஜனவரி 10ஆம் தேதி மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 21,206.77 புள்ளிகளை தொட்டது.

ஜூலை 1ஆம் தேதி சென்செக்ஸ் 12,961.68 புள்ளிகளாக சரிந்தது.

ஜனவரி 10ஆம் தேதிக்கும்- ஜூலை 1ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் சென்செக்ஸ் 39 விழுக்காடு குறைந்துள்ளது.

பங்குச் சந்தையில் அதிக அளவு வர்த்தகம் நடக்கும் 500 நிறுவனங்களின் பங்குகளில் 17 நிறுவன பங்குகள் மட்டுமே சரிவில் இருந்து தப்பியுள்ளன. இவற்றின் விலை அதிகரித்துள்ளது.

இதில் அதிக அளவு வர்த்தகம் நடக்கும் பங்குகளின் மதிப்பு 41 விழுக்காடு வரை குறைந்துள்ளது.

தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள், அதிக அளவு ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் வருவாய் டாலர் மதிப்பில் கணக்கிடப்படுகிறது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்ததால், இதன் வருவாய் குறையும். இதனால் அதிக அளவு ஏற்றுமதி வருவாயை நம்பி இருக்கும் நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தது. தகவல் தொழில் நுட்ப பிரிவு குறியீட்டு எண் 4.75 விழுக்காடு குறைந்தது.

இதே போல் ரியல் எஸ்டேட் பிரிவு குறியீட்டு எண் 68.23, மின் உற்பத்தி 54.11, வங்கி 53.64, இயந்திரம் மற்றும் தளவாட உற்பத்தி பிரிவு 50.45 விழுக்காடு குறைந்துள்ளன.

இதற்கு முக்கிய காரணம் பணப்புழக்கம் குறைந்ததும், வங்கி வட்டி அதிகரிப்பு‌ம் தான்.

பணப்புழக்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி வட்டியை அதிகரிப்பதுடன், வங்கிகளின் ரொக்க கையிருப்பு விகிதத்தை உயர்த்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்