விமான பெட்ரோல் விலை குறைக்க வேண்டும்.

திங்கள், 30 ஜூன் 2008 (19:25 IST)
மத்திய அரசு விமான பெட்ரோல் விலையை முறைப்படுத்தவில்லை என்றால், விமான கட்டணங்கள் அதிகரிக்கும் என்று பாரமவுண்ட் ஏர்வேஸ் மேலாண்மை இயக்குநர் எம். தியாகராஜன் தெரிவித்தார்.

பாரமவுண்ட் ஏர்வேஸ் நிறுவனம் திருச்சி- சென்னை இடையே புதிதாக ஆரம்பித்துள்ள விமான சேவையை திருச்சியில் தியாகராஜன் தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது, விமான பெட்ரோலிய விலையை முறைப்படுத்தவில்லை எனில், விமான கட்டணங்கள் அதிகரிக்கும். இதனால் விமானங்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்துவிடும்.

உலக சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மத்திய அரசு பெட்ரோல், டீசலுக்கு மாணியம் வழங்குகிறது.

ஆனால் விமான பெட்ரோலுக்கு மத்திய அரசு எவ்வித உதவியையையும் செய்வதில்லை. இன்றைய நிலையில் விமான பயணம் என்பது இன்றியமையாததாக ஆகிவிட்டது. இந்நிலையில் விமான பெட்ரோல் விலையில் அரசு பாராமுகமாக இருப்பது சரியானதல்ல.

மத்திய அரசிடம் இருந்து எவ்வித உதவியும் வரவில்லை எனில், குறைந்த கட்டணத்தில் இயங்கும் விமான நிறுவனங்களால் நஷ்டத்தை தாங்கிக் கொள்ள முடியாது. இதனால் விமான கட்டணங்களை உயர்த்துவதை தவிர வேறு வழியில்லை.

இந்த பிரச்சனையை பிரதமர் மன்மோகன் சிங் கவனத்திற்கு இரண்டு வாரங்களுக்கு முன் கொண்டு சென்றேன்.

இந்தியாவில் உள்நாட்டு தேவையைவிட அதிக அளவு விமான பெட்ரோல் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்திய செய்யப்படுவதில் 60 விழுக்காடு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் விமான பெட்ரோல் விலையை விட, உள்நாட்டில் 80 விழுக்காடு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருளுக்கு உள்நாட்டில் ஒரு விலையும். அயல்நாடுகளுக்கு ஒரு விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

மத்திய அரசு இறக்குமதி வரியை குறைப்பதுடன், உள்நாட்டில் விலையை முறைப்படுத்த வேண்டும் என்று தியாகராஜன் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்