பருத்தி: இறக்குமதி வரி நீக்க வேண்டும்!

புதன், 25 ஜூன் 2008 (19:20 IST)
பருத்தி மீதான இறக்குமதி வரியை முழுவதுமாக நீக்குவதுடன், இதன் ஏற்றுமதிக்கும் தடை விதிக்க வேண்டும் என்ற பிரதமர் மன்மோகன் சிங்கிடம் இந்திய ஜவுளி ஆலைகள் கூட்டமைப்பு கோரியுள்ளது.

பருத்தி விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை தடுக்கவும், உள்நாட்டு சந்தையில் தட்டுப்பாடு இல்லாமல் தராளமாக பருத்தி கிடைக்க, அதன் ஏற்றுமதியை டிசம்பர் மாதம் வரையிலாவது தற்காலிகமாக தடை செய்ய வேண்டும். அத்துடன் அந்நிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்திக்கு 10 விழுக்காடு இறக்குமதி வரியையும், 4 விழுக்காடு கூடுதல் வரியையும் முழுமையாக நீக்க வேண்டும் என்று ஜவுளி ஆலைகள் கூட்டமைப்பு கோரியுள்ளது.

இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இந்த கூட்டமைப்பின் தலைவர் பி.டி.பட்டோடியா எழுதியுள்ள கடிதத்தில், உள்நாட்டில் பருத்தி உற்பத்தி அதிகரித்து உள்ள நிலையிலும், இதன் விலை சென்ற ஆண்டை விட தற்போது 35 விழுக்காடு அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் ஏற்றுமதிக்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லாததுதான்.

உலக சந்தையில் ஜவுளி துறையில், நமது நாட்டிற்கு கடும் போட்டியாளராக உள்ள சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு அதிக அளவு பருத்தி ஏற்றுமதி செய்யப்படுகிறது.

நமது நாட்டின் உற்பத்தியாகும் விலை மதிப்புள்ள கச்சா பொருளை, போட்டியாளராக உள்ள நாட்டிற்கு ஏற்றுமதி செய்ய அனுமதிப்பது நமது பொருளாதார நலன்களுக்கு நல்லதல்ல. இத்துடன் கீழ் மட்டத்தில் வேலை வாய்ப்பு உருவாக்குவதற்கு பதிலாக, அந்த நாடுகளில் வேலை வாய்ப்பு உண்டாகின்றது.

அரசின் தொழில் நுட்ப மேம்பாடு திட்டத்தாலும், விவசாயிகளை விழிப்புணர்வு அடைய வைத்த காரணத்தினாலும் நமது நாட்டில் பருத்தி உற்பத்தி அதிகரித்துள்ளது. ஆனால் இதன் பலன் நமக்கு கிடைப்பதற்கு பதிலாக நமது போட்டியாளர்களுக்கு கிடைக்கும் வகையில் உள்ளது.

விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் வசம் பருத்தி மாறியவு
ன் இதன் விலைகள் அதிகரித்து விடுகிறது. உலக சந்தையில் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு பருத்தி கொள்முதல் செய்கின்றனர்.

இவர்களுக்கு லிபர் வட்டி விகிதப்படி (லண்டனில் ஐரோப்பிய வங்கிகளின் வட்டி விகிதம்) குறைந்த வட்டியில் கடன் கிடைக்கிறது. இவர்கள் விலையை உயர்த்துவதற்காக அதிக அளவு பருத்தி வாங்கி இருப்பு வைக்கின்றனர். இங்கு பருத்தி கிடைப்பது குறையும்போது அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர்.

இந்த வருட துவக்கத்தில் பருத்தி இருப்பு 60 லட்சம் பொதி (பேல்)யாக இருந்தால் பருத்தி விலை அதிகரிக்காமல் இருந்திருக்கும். ஆனால் சென்ற வருடம் ஏற்றுமதி 85 லட்சம் பொதிகளாக அதிகரித்து விட்டது (முந்தைய வருடம் 59 லட்சம் பொதி). இதனால் இந்த வருட ஆரம்ப இருப்பு 43 லட்சம் பொதிகளாக குறைந்து விட்டது.

இந்த வருடம் பருத்தி ஆலோசனை ஆணையம் ஏற்றுமதி 85 லட்சம் பொதிகளாக இருக்கும் என்று கூறியுள்ளது. ஆனால் ஜவுளி துறையினர் ஏற்றுமதி 95 லட்சம் பொதியாக இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளனர்.

இந்த துறையில் உள்ளவர்கள், ஏற்றுமதி நிச்சயம் 100 லட்சம் பொதிக்கும் அதிகமாக இருக்கும் என்று கருதுகின்றனர் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பிரச்சனையில் பிரதமர் மன்மோகன் சிங் நேரடியாக தலையிடுவதன் மூலமே ஜவுளி துறையின் நெருக்கடியை தீர்க்க முடியும் என்று ஜவுளி ஆலைகள் கூட்டமைப்பு கருதுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்