இந்தியாவில் முதலீடு செய்யும் அந்நிய நேரடி முதலீட்டு நிறுவனங்கள் (எஃப்.டி.ஐ.) மின் உற்பத்தி, கட்டுமானம், ரியல் எஸ்டேட், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, சேவை துறைகளுக்கு முன்னுரிமை கொடுக்கின்றனர்.
இந்த துறைகளில் கடந்த நான்கு ஆண்டுகளில் 20.8 பில்லியன் டாலர் (1 பில்லியன்=100 கோடி) அந்நிய நேரடி முதலீடு வந்துள்ளது.
2004-05 முதல் 2007-08 ஆகிய மூன்று நிதி ஆண்டுகளில் சேவைத் துறைகளில் அந்நிய நேரடி முதலீடு 444 மில்லியன் (1 மில்லியன்=10 லட்சம்) டாலரில் இருந்து, 6.61 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது என்று அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரியல் எஸ்டேட் துறையில் அந்நிய நேரடி முதலீடு 2004-05 ஆம் நிதி ஆண்டில் அனுமதிக்கப்பட்டது. இந்த துறையில் முதல் இரண்டு வருடங்களில் அந்நிய நேரடி முதலீடு குறைந்த அளவே இருந்தது. ஆனால் 2007-08 ஆம் ஆண்டு அதிகரித்து 2.17 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
அந்நிய நேரடி முதலீடு மின் உற்பத்தி, பகிர்மான துறைகளில் 18 மடங்கு அதிகரித்துள்ளது. இந்த துறையில் 2007-08 ஆம் ஆண்டில் அந்நிய நேரடி முதலீடு 967 மில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
மின் உற்பத்தி, பகிர்மான துறையில் அந்நிய நேரடி முதலீடு அதிக அளவு வராத காரணம் மத்திய, மாநில அரசுகளின் கொள்கைகளில் தெளிவின்மையே.
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறையில் 2004-05 ஆம் ஆண்டில் 113 மில்லியன் டாலர் அந்நிய நேரடி முதலீடு வந்தது. அதற்கு அடுத்த ஆண்டில் 14 மில்லியன் டாலர் மட்டுமே வந்துள்ளது.
ஆனால் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை 2007-08 ஆம் ஆண்டில் அதிக அளவு அந்நிய நேரடி முதலீட்டைப் பெற்றுள்ளது. இந்த ஆண்டில் 1.42 பில்லியன் டாலர் வந்துள்ளது.
கட்டுமானத் துறையில் 2005-06, 2006-07 ஆகிய இரண்டு நிதி ஆண்டுகளில் 151 மில்லியன் டாலர் மட்டுமே அந்நிய நேரடி முதலீடு வந்தது. அடுத்த ஆண்டில் (2007-08) அதிக அளவு உயர்ந்து 1 பில்லியன் டாலரையும் தாண்டியது.
கணினி மென்பொருள்-வன்பொருள் துறையில் 2004-05 ஆம் ஆண்டில் 539 மில்லியன் டாலராக இருந்த அந்நிய நேரடி முதலீடு, 2006-07இல் 2.61 டாலராக அதிகரித்தது.
ஆனால் அதற்கு அடுத்த ஆண்டு 1.41 பில்லியன் மட்டுமே அந்நிய நேரடி முதலீடு வந்துள்ளது.
தொலை தொடர்புத் துறையில் 2004-05 ஆம் ஆண்டில் அந்நிய நேரடி முதலீடு 125 மில்லியனாக இருந்தது. இது 2007-08இல் 1.26 பில்லியன் டாலராக அதிகரித்தது. இதற்கு முக்கிய காரணம் ஹட்ச்-எஸ்ஸார் செல்பேசி நிறுவனத்தின் பங்குகளை வோடோஃபோன் நிறுவனம் வாங்கியதே.
கடந்த நான்கு ஆண்டுகளில் வாகன உற்பத்தி, உலோக உற்பத்தி, இரசாயனம் ஆகியத் துறைகளிலும் அந்நிய நேரடி முதலீடு கணிசமான அளவு வந்துள்ளது.
மத்திய அரசு பல துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி வழங்கியுள்ளது.
அதே நேரத்தில் சில்லரை விற்பனை, அணு சக்தி, லாட்டரி, சூதாட்டம், சிட் ஃபண்ட் ஆகிய துறைகளுக்கு அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி வழங்கவில்லை.
அந்நிய நேரடி முதலீடு பற்றி மத்திய தொழில் மற்றும் வர்த்தக துறை அமைச்சர் கமல் நாத் கூறுகையில், அதிக அளவு பொருளாதார வளர்ச்சியை எட்டவும், தொழில் நுட்ப மேம்பாடு, மற்ற நாடுகளில் கடைப்பிடிக்கப்படும் நிர்வாக முறைகளை பயன்படுத்தவும் உள்நாட்டு முதலீட்டிற்கு துணையாக இருப்பதே அந்நிய நேரடி முதலீடு என்று தெரிவித்தார்.