பணவீக்கம் கட்டுப்படுத்தப்படும்- மத்திய அரசு!

புதன், 25 ஜூன் 2008 (13:49 IST)
ரிசர்வ் வங்கி ரொக்க கையிருப்பு, வங்கி வட்டி விகிதங்களை அரை விழுக்காடு அதிகரித்திருப்பது, பொருளாதார வளர்ச்சியை பாதிக்காமல், பணவீக்கம் கட்டுப்படுத்தும் என்று மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையின் நோக்கம் பணத் தேவையை அதிக பாதிப்பில்லாமல் நிர்வகிப்பதே ஆகும். இதன் நோக்கம் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படக் கூடாது என்பதுதான்.

பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் அதிகரித்து வரும் பணவீக்கம் 11 விழுக்காட்டை தாண்டிவிட்டது. இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமானது.

சவுதி அரேபியா ஜெட்டாவில் கச்சா எண்ணெய் உற்பத்தி நாடுகளுக்கும், பயன்படுத்தும் நாடுகளுக்கும் இடையே கூட்டம் நடைபெற்ற நாளான ஜூன் 20 ந் தேதி, நியுயார்க் சந்தையில் 1 பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 134.63 டாலராக இருந்தது. இது 136.80 டாலராக அதிகரித்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் உள்நாட்டு, அயல் நாட்டு முதலீட்டாளர்களிடையே நம்பிக்கை அதிகரிக்கும். இதனால் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்.

உணவு தானியம் தேவையான அளவு கையிருப்பு இருப்பதை சுட்டிக்காட்டி, விவசாய துறை வளர்ச்சி அதிகரித்துள்ளது.

இத்துடன் ஏற்றுமதி-இறக்குமதி வர்த்தகத்தின் வேறுபாடும் சமாளிக்கும் அளவாக உள்ளது. அந்நியச் செலவாணி கையிருப்பு தேவையான அளவு உள்ளது என்று நிதி அமைச்சகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்