பங்குச் சந்தை தலைவர் ராஜினமா ஏன்?

வெள்ளி, 20 ஜூன் 2008 (16:31 IST)
மும்பை பங்குச் சந்தையின் இயக்குநர் குழுவில் உள்ளவர்கள், இரண்டு குழுக்காளாக செயல்படுவதே, பங்குச் சந்தை தலைவர் சேகர் தத்தா ராஜினமா செய்தற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

கல்கத்தா பங்குச் சந்தையில் முதலீடு செய்வது, மும்பை பங்குச் சந்தையை ரூ.200 கோடி செலவில் தொழில் நுட்ப மேம்பாடு, அகமதாபாத்தில் உள்ள நேஷனல் மல்டி-கமோடிட்டி எக்ஸ்சேஞ்சில் 26 விழுக்காடு பங்குகளை வாங்குவது போன்ற விஷயங்களில் இயக்குநர் குழுவில் இடம் பெற்றுள்ளவர்களிடையே எழுந்த கருத்து வேறுபாடே, தலைவர் சேகர் தத்தா, இயக்குநர் ஜாம்ஷெட் கோத்ரேஜ் ஆகிய இருவரின் ராஜினாமாவிற்கு முக்கிய காரணம் என்று தெரிய வருகிறது.

கடந்த மாதம் தலைமை நிர்வாக அதிகாரி அசோக் கே. ரூட் ராஜினமா செய்தார்.

இந்த மாதம் துவக்கத்தில் செபியின் தலைவர் பாவே, இயக்குநர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போதே இயக்குநர்களிடையே பல்வேறு விஷயங்களில் கருத்து முரண்பாடு இருப்பது பட்டவர்த்தனமாக தெரிந்தது என்று விஷயமறிந்தவர்கள் தெரிவித்தனர்.

இந்தியாவில் நிறுவன கடன் பத்திரங்களின் மீதான வர்த்தகத்தை முதலில் மும்பை பங்குச் சந்தை மட்டுமே மேற்கொள்வதற்கு செபி அனுமதி கொடுத்தது. ஆனால் இதுவும் தொடங்கபடவில்லை. இந்த விஷயத்தில் சில இயக்குநர்கள் கோபமடைந்தாக தெரிகிறது.

இது போன்ற பல்வேறு விஷயங்களில் இயக்குநர்களுக்கு இடையே எழுந்த கருத்து வேறுபாடே, தலைவர் சேகர் தத்தா ராஜினாமாவிற்கு காரணம் என்று கூறப்படுகிறது.




---------------------------------






வெப்துனியாவைப் படிக்கவும்