ரிசர்வ் வங்கி வட்டி விகிதம் 8 விழுக்காடாக உயர்வு!
வியாழன், 12 ஜூன் 2008 (10:30 IST)
ரிசர்வ் வங்கியில் இருந்து வங்கிகள் பெறும் கடனுக்கான வட்டி விகிதத்தை (ரிபோ ரேட்) ரிசர்வ் வங்கி கால் விழுக்காடு அதிகரித்துள்ளது. முன்பு இந்த வட்டி 7.75 விழுக்காடாக இருந்தது. இன்று முதல் 8 விழுக்காடாக உயர்த்தியுள்ளது.
பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும் ரிபோ வட்டியை உயர்த்தியுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
அதே நேரத்தில் வங்கிகளிடம் இருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடனுக்கான (ரிவர்ஸ் ரிபோ) வட்டி அதிகரிக்கப்படவில்லை. இது முன்பு இருந்த மாதிரியே 6 விழுக்காடாக இருக்கும்.
ரிசர்வ் வங்கி நேற்று ரிபோ வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளதால், வங்கிகள் வழங்கும் வீட்டு கடன் உட்பட எல்லா விதமான கடனுக்கான வட்டி அதிகரிக்கும்.
இதே போல் வங்கிகள் வழங்கும் வைப்பு நிதி மீதான வட்டி விகிதமும் உயரும்.
பணவீக்கம் 8.24 விழுக்காட்டிற்கும் மேல் அதிகரித்துள்ளது. அத்துடன் சமீபத்திய பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பால் இனி வரும் வாரங்களில் பணவீக்கம் மேலும் அதிகரிக்கும். இதனை கட்டுப்படுத்துவதற்காகவே ரிபோ வட்டி உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த வட்டி விகிதத்தை உயர்த்தினால், பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும் என்று முன்பு ரிசர்வ் வங்கி கூறியது. ஆனால் இப்போது பொருளாதார வளர்ச்சியை விட, பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதே முக்கியமானது என்று கருதி ரிபோ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.
கடந்த இரண்டு மாதங்களில், ரிசர்வ் வங்கி பணவீக்கத்தை கட்டுப்படுத்த பல முயற்சிகளை மேற்கொண்டது. ஏப்ரல் மாதம் ரிசர்வ் வங்கி, வங்கிகள் வைக்கும் வைப்பு நிதி மீதான வட்டி பணப்புழக்கத்தை கட்டுப்படுத்தவும், பணவீக்கம் அதிகரிக்காமல் இருக்க வங்கிகளின் குறைந்தபட்ட ரொக்க இருப்பு விகிதத்தை, ஏப்ரல் மாதம் 7.50 விழுக்காட்டில் இருந்து 8.25 விழுக்காடாக அதிகரித்தது.
ரிசர்வ் வங்கி ஜூலை மாதம் அறிவிக்கும் காலாண்டு பொருளாதார கொள்கை அறிவிப்பின் போது, மீண்டும் வட்டி விகிதத்தை அதிகரிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.