மக்காச் சோளம், சோயா இருப்புக்கு உச்சவரம்பு

திங்கள், 9 ஜூன் 2008 (14:19 IST)
மக்காச் சோளம், சோயாவை வர்த்தகர்கள் இருப்பு வைத்துக் கொள்ள உச்சவரம்பு விதிக்க வேண்டும் என்று தேசிய முட்டை ஒருங்கினைப்பு‌க் குழு, மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளது.

கோழி தீவனம் தயாரிக்க அதிக அளவு தேவைப்படும் மக்காச் சோளம், சோயா இருப்பு வைத்துக் கொள்ள உச்சவரம்பு விதிப்பால், இவை அதிக அளவு விற்பனைக்கு வரும் என்று தேசிய முட்டை ஒருங்கினைப்பு‌க் குழு‌வி‌ன் தலைவர் அனுராதா தேசாய் நேற்று ஹைதராபாத்தில் தெரிவித்தார்.

இது தொடர்பாக மத்திய அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தின் நகலை செய்தியாளர்களிடம் வெளியிட்டார்.

அப்போது அவர் கூறுகையில், சென்ற வருடம் மக்காச் சோளத்தின் விலை குவின்டால் ரூ.525 ஆக இருந்தது. இதன் விலை தற்போது ரூ.1,200 ஆக அதிகரித்துள்ளது.

இதே போல் சென்ற வருடம் 1 டன் சோயா விலை ரூ.8 ஆயிரமாக இருந்தது. தற்போது இதன் விலை ரூ.20,000 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

இதனால் முட்டையின் உற்பத்தி செலவு ரூ.1 இல் இருந்து ரூ.2 ஆக அதிகரித்து விட்டது. பிராய்லர் கோழியின் உற்பத்தி செலவு 1 கிலோ ரூ. 28 இல் இருந்து ரூ. 41-48 ஆக உயர்ந்துவிட்டது.

தீவனங்களின் உற்பத்தி செலவு அதிகரித்த அளவு, முட்டை, கோழிகளின் விலை உயராத காரணத்தினால், கோழி வளர்க்கும் விவசாயிகள் கடும் நஷ்டத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இவற்றின் விலை அதிகரித்துள்ளதற்கு காரணம், இவற்றின் விலை மேலும் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் சில பன்னாட்டு நிறுவனங்களும், ஆயிரக்கணக்கான வர்த்தகர்களும் லட்சக்கணக்கான டன் மக்காச் சோளம், சோளத்தை இருப்பு வைத்துள்ளனர்.

இந்த வருடம் மக்காச் சோளத்தின் உற்பத்தி அதிகரித்துள்ளது. சென்ற வருடம் 140 லட்சம் டன் உற்பத்தியானது. இந்த வருடம் 184 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. (31.50 விழுக்காடு உயர்வு)

இந்நிலையிலும் விலை உயர்வதற்கு காரணம், இதை அதிக அளவு இருப்பு வைத்துக் கொண்டுள்ளது தான். இதனால் தீவனத்திற்கு விலை உயர்ந்திருப்பதுடன் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

அர்ஜென்டைனா, பிரேசில் ஆகிய இரு நாடுகளும் மக்காச் சோளத்தை ஏற்றுமதி செய்ய தடை விதித்துள்ளன. எனவே அந்நிய நாடுகளின் கவனம் இந்தியா பக்கம் திரும்பி உள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி இதன் விலை உயரும் என்று அதிக அளவு இருப்பு வைத்துள்ளனர்.

எனவே மத்திய அரசு, மக்காச் சோளம், சோயா ஆகியவைகளை வர்த்தகர்கள், பன்னாட்டு நிறுவனங்கள் இருப்பு வைத்துக் கொள்ள உச்சவரம்பு விதிக்க வேண்டும்.

இதன் மூலம் இவை தாராளமாக விற்பனைக்கு வருவதால் விலைகள் குறையும் என்று கூறினார்.

இந்தியாவில் இருந்து 2006-07 ஆம் ஆண்டுகளில் 2 லட்சத்து 70 ஆயிரம் டன் மக்காச் சோளம் ஏற்றுமதி செய்யப்பட்டது. இது சென்ற ஆண்டு 30 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.

அமெரிக்கா உட்பட பல நாடுகள் மக்காட் சோளத்தை பயன்படுத்தி பெட்ரோலில் கலக்கும் எதனால் தயாரிப்பதால், உலக சந்தையில் தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதுடன், இதன் விலையும் அதிகரித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்