பெட்ரோல் விலை உயர்வால் பணவீக்கம் அதிகரிக்கும்!

வியாழன், 5 ஜூன் 2008 (11:55 IST)
புது டெல்லி: பெட்ரோல், டீசல் விலை உயர்வால் நாட்டின் பணவீக்க விகிதம் 8.1 விழுக்காட்டிலிருந்து 9 விழுக்காடாக அதிகரிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.

மத்திய அரசு நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5, டீசல் விலை லிட்டருக்கு ரூ.3, சமையல் எரிவாயு விலை சிலின்டருக்கு ரூ.50 உயர்த்தியது.

இதனால் சரக்கு கட்டணம், போக்குவரத்து செலவுகள் அதிகரிக்கும். பல்வேறு பொருட்களின் விலை உயரும். இந்த விலை ஏற்றத்தின் காரணமாக பணவீக்க அளவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து ஹெச்.டி.எஃப்.சி. வங்கியின் தலைமை பொருளாதார அதிகாரி அபீக் பரூவா, தற்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பண வீக்கம் 9 விழுக்காட்டை எட்டும் என்று கூறியுள்ளார்.

இதற்கு முன் 1995ஆம் ஆண்டு செப்டம்பரில் பண‌வீக்க விகிதம் 9 விழுக்காட்டை தாண்டியது.

மத்திய பெட்ரோலியத் துறை செயலர் எம்.எஸ். ஸ்ரீனிவாசன், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பணவீக்க விகிதம் 0.5- 0.6 விழுக்காடு அதிகரிக்கும் என்று ஏற்கனவே கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்