பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு ஒப்புதல்!

புதன், 4 ஜூன் 2008 (11:50 IST)
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் தெரிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலைகள் எவ்வளவு உயர்த்தப்படலாம் என்பது பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுத்து அறிவிக்கப்படும். இக்கூட்டம் இன்று மாலை நடைபெறும் என்று கூறப்படுகிறது.

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3-ம் டீசல் விலை லிட்டருக்கு ரூ.2-ம் உயர்த்தப்படலாம் என்று தெரிகிறது. ஆனால் சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்படுமா அல்லது ஆண்டிற்கு இத்தனை சிலிண்டர்கள் மட்டுமே தற்பொழுதுள்ள விலையில் அளிக்கப்படும் என்று பயன்பாட்டின் மீது வரையரை விதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

எரிபொருள் விலைகளை உயர்த்தவேண்டியதன் அவசியத்தை விளக்கி இன்று பிரதமர் மன்மோகன் சிங் நாட்டு மக்களிடம் உரையாற்றவிருக்கிறார்.

கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 135 டாலர்களாக அதிகரித்துள்ள நிலையில் பெட்ரோல், டீசல் விலைகளை அதிகரிக்காவிட்டால், மத்திய அரசின் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு இந்த நிதியாண்டில் ரூ.2,46,000 கோடி இழப்பு ஏற்படும் என்று பெட்ரோலிய அமைச்சகம் கவலை வெளியிட்டிருந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்