பெட்ரோலிய நிறுவனங்களுக்கு ரூ.650 கோடி இழப்பு

செவ்வாய், 3 ஜூன் 2008 (09:57 IST)
புதுதில்லி: கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பிற்கேற்ப நாட்டில் பெட்ரோல், டீசல் விலைகளை அதிகரிக்க முடியாததால் மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் உள்ள பெட்ரோலிய நிறுவனங்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.650 கோடி இழப்பு ஏற்படுகிறது.

இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயின் விலை ஒரு பீப்பாய் 135 டாலராக உயர்ந்துவிட்டது. ஆனால் அதற்கேற்ப பெட்ரோல், டீசல் விலை இன்னும் உயர்த்தப்படவில்லை. எனவே இந்தியன் ஆயில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்களுக்கு தினமும் ரூ.650 கோடி இழப்பு ஏற்படுகிறது.

இந்த மூன்று நிறுவனங்களுக்கும் மொத்த இழப்பு ரூ.2,25,040 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே பணவீக்கம் 8.1 சதவீதம் அதிகரித்திருக்கும் நிலையில், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தினால் பணவீக்கம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை பெட்ரோலிய நிறுவனங்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ. 16.34 இழப்பு ஏற்பட்டது. ஜூன் 1 முதல் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ. 21.43 இழப்பு ஏற்படும் என்று தெரிகிறது.

ஒரு லிட்டர் டீசல் இதுவரை ரூ.23.49 நஷ்டத்தில் விற்கப்பட்டது. இனி ஒரு லிட்டருக்கு ரூ.31.58 இழப்பு ஏற்படும். மண்ணெண்ணெய் இதுவரை ரூ.28.72 நஷ்டத்தில் விற்கப்பட்டது. இனி லிட்டருக்கு ரூ.35.98 இழப்பு ஏற்படும்.

இதே போல சமையல் எரிவாயவிற்பனையில் ஒரு சிலிண்டருக்கு ரூ.305.90 இழப்பு ஏற்பட்டது. இனி ஒரு சிலிண்டருக்கு ரூ. 353 இழப்பு ஏற்படும். பெட்ரோல், டீசல் விலை உயர்வு பற்றி விவாதித்து முடிவு எடுக்க மத்திய அமைச்சரவைக் கூட்டம் புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை நடைபெறும் என்று தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்