சிறிய தொழில், வியாபார நிறுவனங்களுக்கு தாராள கடன் - சிதம்பரம்!

சனி, 31 மே 2008 (18:01 IST)
அதிக வட்டி வசூலிக்கும் தனியார் பிடியில் இருந்து விடுபட சிறு மற்றும் மிகச் சிறிய அளவில் உள்ள தொழில், வியாபார நிறுவனங்களுக்கு தாரளமாக கடன் கொடுக்கும் பொறுப்பு வங்கிகளுக்கு உள்ளது என்று நிதி அமைச்சர் சிதம்பரம் கூறினார்.

இன்று மும்பையில் சிறு, மிகச் சிறிய பிரிவுகளுக்கான வங்கிகளின் வழிகாட்டி நெறிமுறைகள் அடங்கிய கையேட்டை சிதம்பரம் வெளியிட்டார்.

அப்போது அவர் பேசும் போது, சிறு, மிகச் சிறிய அளவில் உள்ள தொழில்கள், வியாபார அமைப்புகள் அதிக வட்டி வசூலிக்கும் தனியார்களையே நம்பி உள்ளன. இவர்களின் பிடியில் இருந்து விடுபடும் வகையில், வங்கிகளுக்கு சிறு, மிக சிறிய தொழில், வியாபார நிறுவனங்களுக்கு தேவையான கடன் கொடுக்கும் கடமையும் பொறுப்பும் உண்டு.

நாம் விவசாய துறை, கல்வி, தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதில் குறிப்பிட்ட அளவு முன்னேறியுள்ளோம்.

கடந்த சில வருடங்களாக சிறு, மிக சிறிய தொழில், வியாபார நிறுவனங்களுக்கு, சுய உதவி குழுக்கள் மூலம் கடன் கொடுத்து வருகின்றோம். ஆனால் தேவையான அளவு கடன் கொடுக்கவில்லை என்றே நினைக்கின்றேன்.

இவர்கள் குறைந்த சம்பளத்தில் நிரந்தர வேலையில் உள்ளவர்களை விட அதிக அளவு கஷ்டப்படுகின்றனர்.

தினமும் ஒரே மாதிரி வியாபாரம் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. அதே போல் தினமும் வருமானம் கிடைக்கும் எனறும் எதிர்பார்க்க முடியாது. தினசரி பொருளாதார தேவைக்கு கடன் என்பது இன்றியமையாதது. கடன் கிடைக்கும் வாய்ப்பு இல்லை என்றால் முன்னேற்றம் அடைவதற்கான வாய்ப்பும் இல்லை. இந்த சூழ்நிலையில் இவைகள் நெருக்கடியில் இருந்து மீள உதவி தேவைப்படுகிறது.

இந்தியா போன்ற வளரும் நாட்டில் பல வருடங்களாக சிறு, மிக சிறிய தொழில், வியாபார நிறுவனங்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்