பங்கு பரிவர்த்தனை முத்திரை கட்டணம் குறைப்பு!

செவ்வாய், 25 மார்ச் 2008 (17:56 IST)
பங்கு பரிவர்த்தனை முத்திரை கட்டணத்தை குறைக்க டில்லி மாநில அரசு முடிவு செய்துள்ளது.

டில்லியிலும், மற்ற நகரங்களைப் போல் அதிக அளவு பங்கு வர்த்தகம் நடக்கிறது. இதை கருத்தில் கொண்டு டில்லி மாநில அரசு, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் உள்ள அளவில் முத்திரை கட்டணத்தை குறைக்க முடிவு செய்துள்ளது.

இதை டெல்லி சட்டமன்றத்தில் 2008-09 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் ஏ.கே.வாலியா தெரிவித்தார்.

டெல்லியில் பங்கு வர்த்தகத்தை மேலும் அதிகரிப்பதற்காக, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் உள்ளது போல், பங்கு பரிவர்ததனைக்கான முத்திரை தாள் கட்டணத்தை குறைக்க போகின்றோம். இப்போது ஃப்யூச்சர் அண்ட் ஆப்ஷன் முறையில் முத்திரை கட்டணம் .01 விழுக்காடு வசூலிக்கப்படுகிறது. இதை .002 விழுக்காடாக குறைக்கபடும். பங்குகளை உடனடியாக வழங்கும் முறையில் உள்ள முத்திரை கட்டணம் இப்போதுள்ள .01 விழுக்காடே தொடரும். இதற்கு தேவையான சட்ட திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்படும்.

டில்லியில் நடைபெறும் எல்லா பங்கு வர்த்தகமும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மின்னணு முறைக்கு மாற்றப்படும். இதில் முத்திரை கட்டணமும் மின்னணு முறையிலேயே விதிக்கப்படும் என்று தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்