பட்ஜெட்டில் கல்வி, விவசாயத்திற்கு முக்கியத்துவம்: சிதம்பரம்
திங்கள், 11 பிப்ரவரி 2008 (16:35 IST)
மத்திய நிதிநிலை அறிக்கையில் கல்வி, விவசாயத்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று நிதியமைச்சர் சிதம்பரம் கூறினார்.
சிவகங்கையில் நேற்று காங்கிரஸ் கட்சியினருக்கு உறுப்பினர் அட்டை வழங்கிய மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் அங்கு நடந்த பொது கூட்டத்தில் பேசுகையில், "கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதன் மூலமே இந்தியா வல்லரசு நாடாகும். மத்திய அரசு விவசாயிகளின் நலனில் அக்கறை செலுத்தும், விவசாயிகள் தங்களது குழந்தைகளின் கல்வியில் அக்கறை செலுத்த வேண்டும்.
வரும் 29ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய நிதிநிலை அறிக்கையில் கல்வி மற்றும் வேளாண்மைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். மத்திய அரசு கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ.28 ஆயிரம் கோடியை கல்வித்துறைக்கு ஒதுக்கியுள்ளது. அதில் ரூ.17,636 கோடி ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டது. கடந்த பா.ஜ.க., கூட்டணி ஆட்சியில் ஒதுக்கப்பட்ட நிதியை விட இது நான்கு மடங்கு அதிகம். மாநிலத்திலும், தேசிய அளவிலும் இளைஞர்களின் முன்னேற்றத்தை தமிழக காங்கிரஸ் விரும்புகிறது" என்றார்.
வாரத்திற்கு ஒருமுறை சிதம்பரம் தனது நாடாளுமன்ற தொகுதிக்கு வந்து, பொதுமக்களை ஊக்குவிக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் குழு தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தி பேசினார்.