எம்மார் எம்.ஜி.எஃப். பங்கு விலை குறைப்பு!

வியாழன், 7 பிப்ரவரி 2008 (15:36 IST)
பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள மந்த நிலையால் எம்மார் எம்.ஜி.எஃப். நிறுவனம் பங்குகளின் விலையை இரண்டாவது தடவையாக குறைத்துள்ளது.

பல்வேறு கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள எம்மார் எம்.ஜி.எஃப். நிறுவனம் பங்குகளை வெளியிட தீர்மானித்தது. முதலில் இதன் விலை ரூ.610 முதல் ரூ.690 என அறிவித்தது. இது 10.25 கோடி பங்குகளை வெளியிடுவதாக அறிவித்தது.

பங்குச் சந்தையில் நிலவும் மந்தமான நிலை மற்றும் புதிதாக புக் பில்டிங் முறையில் பங்குகளை வெளியிடும் நிறுவனங்கள் அதிக விலை வைக்கின்றன என்ற பரவலான கருத்து நிலவுவதால், பங்குகளின் விலையை குறைத்தது. இதன் படி 1 பங்கு விலை ரூ.540 முதல் ரூ.630 என அறிவித்தது.

இந்த பங்குகளுக்கு விண்ணப்பிக்கும் காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இதற்கு தேசிய பங்குச் சந்தையின் புள்ளி விவரப்படி நேற்று மாலை 5 மணி வரை, மொத்த பங்குகளில் 75 விழுக்காடு பங்குகள் மட்டுமே கேட்டு விண்ணப்பம் வந்துள்ளது.
செபி-யின் விதிமுறைகளின் படி 90 விழுக்காடு பங்குகளுக்கு விண்ணப்பம் வர வேண்டும்.

இதனால் விண்ணப்பிக்கும் காலத்தை மேலும் 5 நாட்களுக்கு நீடித்திருப்பதுடன் பங்குகளின் விலையை ரூ.540 இல் இருந்து ரூ.530 ஆக குறைத்துள்ளது. ஆனால் அதிகபட்ச விலையில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை.

இதே மாதிரி வொட்ஹார்ட் மருத்துவமனையின் பங்குகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். இதற்கு நேற்று மாலை இறுதி வரை 13 விழுக்காடு விண்ணப்பங்களே வந்துள்ளது என தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்