இந்தியாவில் உள்ள வங்கிகள் வட்டியை படிப்படியாக குறைக்கும் என்று அமெரிக்க முதலீட்டு வங்கி கோல்மென் சாஸ் நேற்று கருத்து தெரிவித்தது.
இதன் ஆய்வறிக்கையில், ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யவில்லை. வங்கிகளில் அதிக பண வரவு இருக்கின்றது. இதனால் இவை வைப்பு தொகை மற்றும் கடன்கள் மீதான வட்டியை குறைக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளது.
ஹெச்.டி.எப்.சி. என்று அழைக்கப்படும் ஹவுசிங் டெவலப்மென்ட் பைனான்ஸ் கார்ப்பரேஷன் வீட்டு கடன் மீதான வட்டியை சென்ற வாரம் கால் விழுக்காடு குறைப்பதாக அறிவித்தது. இதை தொடர்ந்து பல வங்கிகள் வட்டி குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதற்கு தகுந்தாற்போல் சில வங்கிகள் வட்டியை குறைப்பதாக அறிவித்துள்ளன.
கார்ப்பரேஷன் வங்கி
கார்ப்பரேஷன் வங்கி சிறு தொழில் மற்றும் குறுந் தொழில்களுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டியை கால் விழுக்காடு குறைத்துள்ளதாக நேற்று அறிவித்தது. இத்துடன் இந்த வங்கி நுகர்வோர் கடன், தனிநபர் கடன், வீட்டு கடன், வாகன கடன்களுக்கு அரை விழுக்காடு வரை குறைத்துள்ளது. இந்த வட்டி குறைப்பு பிப்ரவரி 15 ந் தேதி முதல் அமலுக்கு வரும் என்று வங்கியின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனரா வங்கி
கனரா வங்கி வீட்டு கடன் மீதான வட்டியை கால் விழுக்காடு குறைத்துள்ளது. இது நிரந்த வட்டி, மாறும் வட்டி ஆகிய இரண்டு விதமான கடன்களுக்கும் பொருந்தும். இந்த புதிய வட்டி விகிதம் பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும். இதன் படி ரூ.20 லட்சம் வரை 5 வருட தவணையில் திருப்பி செலுத்தும் கடன்களுக்கு 10 விழுக்காடு, பத்து வருடங்களில் திருப்பி செலுத்தும் கடன்களுக்கு 10.25 விழுக்காடு, 25 வருடங்களில் திருப்பி செலுத்தும் கடன்களுக்கு 10.50 விழுக்காடு வசூலிக்கப்படும்.
இதே மாதிரி 20 இலட்சத்திற்கும் அதிகமான கடன்களுக்கும் கால் விழுக்காடு வட்டி குறைக்கப்பட்டுள்ளது.
அலகாபாத் வங்கி.
அலகாபாத் வங்கி வீட்டு கடன், நுதர்வோர் கடன், கல்வி கடன், கார் கடன் போன்றவைகளுக்கு அரை விழுக்காடு முதல் 1 விழுக்காடு வரை வட்டி குறைத்துள்ளது.
இதே போல் இரண்டு வருடங்களில் இருந்து பத்து வருடத்தில் முதிரிவடையும் வைப்பு நிதிக்காண வட்டியையும் கால் விழுக்காடு குறைத்துள்ளது. குறுகிய கால வைப்பு நிதி கடனை முக்கால் முதல் 1 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது.
இதை தொடர்ந்து மற்ற பொதுத்துறை, தனியார் துறை வங்கிகளும் வட்டி குறைப்பு அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.