பங்குச் சந்தையின் சரிவுக்கு சிதம்பரமே காரணம் : சோமய்யா!

திங்கள், 21 ஜனவரி 2008 (20:39 IST)
பங்குச் சந்தையில் இன்று ஏற்பட்ட சரிவிற்கு நிதி அமைச்சர் ப. சிதம்பரமும், பங்குச் சந்தையை கட்டுப்படுத்தும் செபியுமே காரணம் என்று பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முதலீட்டாளர்கள் குறை தீர்க்கும் அமைப்பின் தலைவருமான கிரித்தி சோமய்யா குற்றம் சாட்டினார்.

அவர் மேலும் கூறுகையில், இன்று ஏற்பட்ட சரிவால், பங்குச் சந்தையில் முதலீடு செய்து இருந்தவர்கள் ரூ.9 லட்சம் கோடி (ரூ.9,00,000 கோடி) நஷ்டமடைந்துள்ளனர்.

இதே மாதிரி சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்தது. அப்போது நிதி அமைச்சர் சிறு முதலீட்டாளர்களின் நலனை பாதுகாப்பது குறித்து பேசினார். இன்று எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

இன்றைய சரிவுக்கு புதிதாக வெளியிடப்பட்ட பங்குகள் அதிக விலையில் வெளியிடப்பட்டதும் ஒரு காரணம். இந்த வருடம் புதிதாக வெளியிடப்பட உள்ள 19 பங்குகளுக்கும் அதிக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று சோமய்யா கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்