நுகர்வோர் பொருட்களுக்கு வரி குறைக்கபடலாம்!

வியாழன், 17 ஜனவரி 2008 (17:45 IST)
தொழில் துறையின் வளர்ச்சி குறைந்துள்ளதை சரிக்கட்ட், வரும் மத்திய நிதி நிலை அறிக்கையில் (பட்ஜெட்) நுகர்வோர் பொருட்களுக்கு உற்பத்தி வரி குறைக்க வாய்ப்பு உண்டு என்று தெரிகிறது.

பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு தலைவர் டாக்டர் சி. ரெங்கராஜன், வரும் நிதி நிலை அறிக்கை குறித்து மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்துடன் புதன்கிழமையன்று ஆலோசனை நடத்தினார்.

அப்போது நுகர்வோர் பொருட்களை வாங்குவது குறைந்துள்ளதால், தொழிற்துறை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனை சரிக்கட்ட நுகர்வோர் பொருட்கள் மீது விதிக்கப்படும் உற்பத்தி வரியை குறைக்க ஆலோசித்ததாக தெரிகிறது.

இந்த சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களிடம் ரெங்கராஜன் கூறியதாவது:

நாங்கள் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சி குறித்து ஆலோசித்தோம். இதற்காக மத்திய அரசின் முதலீட்டை பல துறைகளில் அதிகரிப்பது, நுக்வோர் பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் உற்பத்தி வரியை குறைப்பது குறித்து ஆலோசித்தோம்.

அடுத்த நிதி ஆண்டில் 8.5 விழுக்காடு பொருளாதார வளர்ச்சி இருக்கும் என்று மதிப்பீட்டுள்ளோம். இது இந்த நிதி ஆண்டில் மதிப்பிட்ட வளர்ச்சி விகிதத்தை விட குறைவானது. இந்த வருடம் 9 விழுக்காடு பொருளாதார வளர்ச்சி இருக்கும் என்று கணித்திருந்தோம். வருமான வரி, நிறுவன வரி போன்ற நேரடி வரிகள் இப்போதுள்ள நிலையிலேயே தொடர வேண்டும் என்று விரும்புகின்றோம். அதே நேரத்தில் வரி விதிக்கும் அளவுகளில் (சிலாப்) மாற்றம் செய்யலாம்.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்து வருவது பற்றியும் விவாதித்தோம். இதற்கு மூன்று விதமான தீர்வுகளை கூறியுள்ளோம். 1. ரூபாயின் மதிப்பை சிறிது உயர்த்துவது; 2. அந்நிய முதலீடு வருவதை ஒரளவு கட்டுப்படுத்துவது ஆகிய ஆலோசனைகளை கூறி உள்ளோம். வங்கி வட்டி தொடர்பாக எதுவும் விவாதிக்கவில்லை என்று கூறினார்.

சென்ற நவம்பர் மாதத்திய தொழில் துறை வளர்ச்சி புள்ளி விவரத்தில், நுகர்வோர் பொருட்களின் உற்பத்தி 4.1 விழுக்காடு குறைந்தது. இதற்கு முக்கிய காரணம் நுகர்வோர் பொருட்களின் விற்பனை பாதிக்கப்பட்டதுதான் என ஒரு சாரார் பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.

இந்த மந்தமான நிலைமையை மாற்ற, நிதி அமைச்சர் ப.சிதம்பரம் சமீபத்தில் நுகர்வோர்களுக்கு தாராளமாக கடன் கிடைக்கும் வசதியை செய்யும் படி வங்கி உயர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்