சிறப்பு பொருளாதார மண்டலம்: ரத்து அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது - கமல்நாத்!

Webdunia

வெள்ளி, 4 ஜனவரி 2008 (13:36 IST)
சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு கொடுத்த அனுமதியை ரத்துசெய்வதற்கு மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உண்டு என்று மத்திய வர்த்தக அமைச்சர் கமல்நாத் தெரிவித்தார்.

கோவாவில் 15 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் மூன்று சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைப்பதற்கு மத்திய அரசு இறுதி அனுமதி வழங்கி உள்ளது.

கோவா மாநிலத்தில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கப்பட்டால், சுற்றுச் சூழல் பாதிக்கப்படும். இதன் இயற்கை அழகு சீரழிந்துவிடும் என்று கோவாவைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் உட்பட சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனை ஏற்றுக் கொண்ட கோவா மாநில அரசு, அங்கு அமைக்கப்படவுள்ள சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கான அனுமதியை ரத்து செய்வதாக அறிவித்தது.

இந்நிலையில் மத்திய வர்த்தக துறை செயலாளர் புதன் கிழமையன்று சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு ஒரு முறை அனுமதி வழங்கி விட்டால், அதை ரத்து செய்ய முடியாது என்று கூறியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக மத்திய வர்த்தக அமைச்சர் கமல்நாத், சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு கொடுத்த அனுமதியை திரும்ப பெற மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உண்டு என்று கூறியுள்ளார்.

கோவா முதலமைச்சர் திகம்பர் காமத் நேற்று கமல்நாத்தை சந்தித்து கோவா மாநிலத்தில் அமையவுள்ள 15 சிறப்பு பொருளாதார மண்டலங்களை ரத்து செய்ய வேண்டும் எனறு கேட்டுக் கொண்டார்.

இந்த சந்திக்கு பின் செய்தியாளர்களிடம் கமல்நாத் பேசும் போது, சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கான சட்டத்தில், அனுமதி கொடுத்ததை ரத்து செய்யும் அதிகாரம் உள்ளது. நாங்கள் கோவா மாநிலத்தில் சிறப்பு பொருளாதார மண்டலங்களை திணிக்க விரும்பவில்லை. இதை ரத்து செய்வற்கு மாநில அரசிடன் இருந்து முறையான கடிதம் வந்த பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

கோவா மாநில முதல்வர் திகம்பர் காமத் பேசும் போது, நான் அமைச்சரின் உறுதி மொழியால் திருப்தி அடைந்துள்ளேன். அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் சிறப்பு பொருளாதார மண்டலங்களை ரத்து செய்யுமாறு முறைப்படியான கடிதம் மத்திய அரசுக்கு அனுப்பப்படும். கோவா மக்கள் விரும்பவில்லை என்றால், அவை அங்கு வரக் கூடாது என்று கூறினார்.

அவரிடம் சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கான கொள்கைகளை மறு பரிசீலனை செய்ய வேண்டுமா என்று கேட்டதற்கு, கோவா மற்ற மாநிலங்களை போல் இல்லை. சர்வதேச சுற்றுலா பயணிகளை கவரும் ஐந்து இடங்களில் முதல் இடத்தில் உள்ளது. இந்த மாநிலத்தில் தொழில் மயமாக்குவதற்கு ஒரு வரைமுறை உள்ளது. அரசிடம் அதிக நிலங்கள் இல்லை. மக்களிடம் தான் நிலங்கள் உள்ளது. காங்கிரஸ் அரசு மக்களின் விருப்பத்திற்கு எதிராக செயல்படாது என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்