உள்நாட்டு உற்பத்தி உயரும்!

வியாழன், 27 டிசம்பர் 2007 (20:17 IST)
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 9 விழுக்காடாக இருக்கும் என்று அசோசெம் கணித்துள்ளது.

இந்திய வர்த்தக மற்றும் தொழில் சங்கங்களின் மத்திய அமைப்பு (அசோசெம்) இந்த நிதி ஆண்டில் (ஏப்ரல் 2007 முதல் 2008 மார்ச் வரை) மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.) 9 விழுக்காடாக இருக்கும் என்று கணித்துள்ளது.

முன்பு இந்த அமைப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.7 விழுக்காடாகதான் இருக்கும் என்று கூறியிருந்தது.

இந்த அமைப்பு டிசம்பர் மாதம் முதல் மற்றும் இரண்டாவது வாரத்தில் 175 நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர்களிடம் கருத்து கணிப்பு நடத்தியது. இவர்களில் 65 விழுக்காடு தலைமை செயல் அலுவலர்கள் பல துறைகளில் அதிகளவு முதலீடு செய்யப்பட்டுள்ளது. இவைகளில் உற்பத்தி அதிகரிப்பது கண்கூடாக தெரிகிறது. எனவே மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவு உயரும் என கருத்து தெரிவித்துள்ளனர்.
அடுத்த வரும் மாதங்களில் அரசு மற்றும் தனியார் துறைகள் அடிப்படை கட்டமைப்பு உருவாக்குதலில், புதிய இயந்திரங்களை நிறுவுதல், புதிய தொழிற்சாலை அமைததல், விரிவாக்கம் போன்றவைகளில் அதிகளவு முதலீடு செய்வார்கள் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய இரண்டு மாதங்களில் பல்வேறு நிறுவனங்கள் பெட்ரோலியம், உருக்கு, சிமென்ட், ரியல் எஸ்டேட் உட்பட பல்வேறு துறைகளில் 1 லட்சத்து 75 ஆயிரம் கோடி முதலீடு செய்வதாக அறிவித்துள்ளன.

அத்துடன் உலக பொருளாதாரத்தின் மந்தமான நிலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு ஆகியவை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்படுத்துவதாக உள்ளன என்று 75 விழுக்காடு தலைமை செயல் அலுவலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

விவசாயம், சேவை துறை தொழில்களின் வளர்ச்சி சீராக இருக்கும் என்று 72 விழுக்காடு தலைமை செயல் அலுவலர்கள் கூறியுள்ளனர். இவர்களில் 69 விழுக்காடு அலுவலர்கள் இந்த நிதி ஆண்டில் விவசாய துறை வளர்ச்சி 3.5 விழுக்காடாக இருக்கும் என்று கூறியுள்ளனர்.

இந்த நிதி ஆண்டி்ன் முதல் காலாண்டில் விவசாய துறை வளர்ச்சி 3.8 விழுக்காடாகவும், இரண்டாவது காலாண்டில் 3.6 விழுக்காடாகவும் இருந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்