எல்.ஐ.சி. தஞ்சை பிராந்தியத்தில் சாதனை!

வியாழன், 27 டிசம்பர் 2007 (13:13 IST)
தஞ்சை பிராந்தியத்தில் ஆயுள் காப்பீடு கழகம் மூன்று லட்சத்திற்கும் அதிகமான பாலிசிகளை விற்பனை செய்து சாதனை படைத்து்ள்ளது.

பொதுத் துறை நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் (எல்.ஐ.சி.) இந்த நிதி ஆண்டில் இது வரை தஞ்சை பிராந்தியத்தில் 3 லட்சத்து 31 ஆயிரம் புதிய ஆயுள் காப்பீடு பாலிசிகளை விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் முதல் தவணை பிரிமியமாக ரூ.422 கோடியே 79 லட்சம் பெற்றுள்ளது.

ஜெயங்கொண்டத்தில் நேற்று துணை கிளை அலுவலகத்தை தஞ்சை பிராந்திய மேலாளர் கே.ராஜீவன் நாயர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசும் போது எல்.ஐ.சி.யின் தஞ்சை பிராந்தியத்தில் தமிழகத்தின் எட்டு மாவட்டங்களும், புதுச்சேரி மாநிலமும் அடங்கி உள்ளது. இந்த பிராந்தியத்தில் 27 கிளைகள் உள்ளன. இந்த கிளைகள் மூலம் பாலிசி எடுத்திருந்த 48,181 பேருக்கு காப்பீட்டு காலம் முடிந்த பிறகு உள்ள கணக்கை முடித்து ரூ.91 கோடியே 93 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. ஆயுள் காப்பீடு காலத்தில் இறந்த 3,404 பேரின் வாரிசுதாரர்களுக்கு ரூ.113.67 கோடி வழங்கப்பட்டுள்ளது.

தற்போது ஜெயங்கொண்டத்தில் கிளை தொடங்கி இருப்பது இந்த பகுதியில் உள்ள முகவர்கள், பாலிசி எடுத்த வாடிக்கையாளர்கள் தவணை தொகையை செலுத்துவது, பாலிசி பற்றிய விபரங்களை விசாரிப்பது போன்றவைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

தஞ்சாவூரில் உள்ள கிளை புதிதாக அதிகளவு காப்பீடு பாலிசிகளை விற்பனை செய்துள்ளது. அத்துடன் அதிக முதல் பிரிமியம் தொகையையும் வசூலித்துள்ளது.
புதுக்கோட்டை கிளை ஆயுள் காப்பீடு பாலிசியில் முதல் தவணையில் அதிக பிரிமியம் வசூலித்து சாதனை படைத்துள்ளது என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்