வங்கி கட்டணங்கள் குறைப்பு: ஆர்.பி.ஐ. ஆலோசனை!

புதன், 26 டிசம்பர் 2007 (17:03 IST)
வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் வசூல் செய்யும் பல கட்டணங்களைக் குறைக்க ரிசர்வ் வங்கி ஆலோசித்து வருகிறது.

வங்கிகள் தற்போது வாடிக்கையாளர்களிடம் இருந்து காசோலை புத்தகத்திற்கு கட்டணம், தானியங்கி பணம் எடுக்கும் இயந்திரத்தை (ஏ.டி.எம். ) பயன்படுத்துவதற்கு கட்டணம், வரைவோலை கட்டணம், ஒரு வங்கியின் கிளையில் இருந்து மற்றொரு வங்கி கிளைக்கும், மற்றொரு கணக்கிலும் பணம் அனுப்புவதற்கு கட்டணம் உட்பட பல்வேறு கட்டணங்களை வசூலிக்கின்றன.

இவை எல்லா வங்கிகளிலும் ஒரே மாதிரியாக இல்லாமல் பல்வேறு விதமாக உள்ளன. சில வங்கிகள் ஒரு முறை ஏ.டி.எம். களில் பணம் எடுப்பதற்கு ரூ.57 கூட கட்டணமாக வசூலிக்கின்றன.

இவைகளை ஒரே மாதிரியாக இருக்கும் படி செய்வதற்கு ரிசர்வ் வங்கி ஆலோசித்து வருகிறது. இதற்கான ஆலோசனை வழங்குவதற்கான ஆவணத்தை ரிசரிவ் வங்கி சுற்றுக்கு விட்டுள்ளது.

இதில் ஒரு வங்கியின் ஏ.டி.எம். இயந்திரத்தை மற்றொரு வங்கியில் கணக்கு வைத்திருப்பவர் பயன்படுத்தினால் அதிகபட்சமாக ரூ.20 மட்டுமே கட்டணமாக வசூலிக்க வேண்டும். அடுத்த வருடம் ஏப்ரல் 1 ந் தேதி முதல் வங்கிகள் கணக்கில் உள்ள இருப்பை கேட்டால் கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும்.

வங்கிகள் பணமாற்றுகான கட்டணத்தை சென்ற டிசம்பர் 23 ஆம் தேதி அன்று இருந்த அளவிற்கு மேல் உயர்த்தக் கூடாது. வங்கிகள் பணமாற்றுக்காக மற்றொரு வங்கிக்கு செலுத்தும் கட்டணத்தை மட்டுமே, வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும். இதற்கு மேல் வங்கிகள் தங்களின் இலாபமாக கட்டணத்தை வசூலிக்க கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி பொதுத்துறை வங்கிகள், மற்றும் தனியார் துறை வங்கிகளிடம் இருந்து பெற்ற தகவல் படி, வங்கிகள் ஏ.டி.எம். களில் பணம் எடுக்கும் போது, கணக்கில் உள்ள இருப்பு தெரிந்து கொள்ளும் போது ரூ.57 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. வங்கிகள் மற்றொரு வங்கிகளுக்கு பணம் மாற்றும் போது இரண்டு விழுக்காடு கட்டணம்தான் செலுத்துகின்றன. ஆனால் இதற்கும் அதிகமாக வாடிக்கையாளர்களிடம் இருந்து வ.சூலிக்கின்றன என தெரிய வந்துள்ளது.

இவற்றை ஒழுங்குபடுத்தவும், கட்டுப்படுத்தவும் ரிசர்வ் வங்கி ஆலோசித்து வருகிறது. இதற்காக வங்கிகள் மற்றும் பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் ஆலோசனை கேட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்