அஞ்சலக காப்பீடு நிதி நிர்வகிப்பு : எஸ்.பி.ஐ., யூ.டி.ஐ.க்கு அனுமதி!

வியாழன், 13 டிசம்பர் 2007 (19:03 IST)
அஞ்சலக ஆயுள் காப்பீடு மற்றும் கிராமப்புற அஞ்சலக ஆயுள் காப்பீடு நிதியை நிர்வகிக்கும் பொறுப்பு யூ.டி.ஐ., எஸ்.பி.ஐ. பரஸ்பர நிதியங்களிடம் ஒப்படைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இன்று மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரிய ரஞ்சன் தாஸ்முன்ஷி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அஞ்சலகங்களின் சேர்க்கப்படும் ஆயுள் காப்பீடு, கிராமப்புற அஞ்சலக ஆயுள் காப்பீடு திட்டங்களின் மூலம் சேரும் நிதியை நிர்வகிக்கும் பொறுப்பு யூ.டி.ஐ. பரஸ்பர நிதியம், எஸ்.பி.ஐ. பரஸ்பர நிதியம் ஆகிய இரண்டு நிறுவனங்களிடம் ஒப்படைப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த இரண்டு நிறுவனங்களும் இந்த நிதியை இலாபகரமாக முதலீடு செய்வதற்கு தனியாக முதலீடு வாரியம் அமைக்க வேண்டும். இது நிதியை எதில் முதலீடு செய்யலாம் என்று முடிவெடுத்து செயல்படும். இதன் மூலம் இந்த நிதி மற்ற ஆயுள் காப்பீடு நிதியை நிர்வகிப்பது போல், நிதி நிபுணர்களின் மேற்பார்வையில் நிர்வகிக்க உதவிகரமாக இருக்கும் என்று கூறினார்.

இது குறித்து நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில், இது தேசிய முதலீட்டு நிதி நிர்வகிக்க தனி அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இது போன்றே அஞ்சலக ஆயுள் காப்பீடு நிதியை நிர்வகிக்கவும் தனி அமைப்பு ஏற்படுத்தப்படுகிறது.

தற்போது அஞ்சல ஆயுள் காப்பீடு திட்டத்தில் ரூ.8,934 கோடியும், கிராமப்புற அஞ்சலக ஆயுள் காப்பீடு திட்டத்தில் ரூ.1,625 கோடியும் உள்ளது. இந்த நிதியில் பெரும் பகுதி ஏற்கனவே முதலீடு செய்யப்பட்டுள்ளது. இப்போது அமைக்கப்படும் முதலீடு வாரியம் இந்த நிதியை இலாபகரமாக முதலீடு செய்வதற்கு தகுந்த ஆலோசனை வழங்கும் என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்