சரக்கு - சேவை வரி விதிக்க அனுமதி

வியாழன், 29 நவம்பர் 2007 (13:12 IST)
மத்திய, மாநில அரசுகள் சரக்கு-சேவை வரியை விதிக்கலாம் என்று வாட் வரி உயர்நிலை குழு கூறியுள்ளது.

சரக்கு-சேவை வரிகள் 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ந் தேதி முதல் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த புதிய வரியை விதிக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் மட்டுமே இருக்கும் என்ற கருத்து நிலவி வந்தது.

இனி இந்த புதிய வரியை விதிக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று வாட் வரி (மதிப்பு கூட்டு வரி) உயர்நிலை குழு பரிந்துரைக்க போகின்றது.

மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் விற்பனை வரிகளுக்கு பதிலாக வாட் எனப்படும் மதிப்பு கூட்டு வரியை எவ்வாறு அமல் படுத்துவது என்று ஆலோசனை கூற மாநில நிதி அமைச்சர்கள் அடங்கிய வாட் வரி உயர்நிலை குழு அமைக்கப்பட்டது. இதன் தலைவராக மேற்கு வங்க நிதி அமைச்சர் அசீம் தாஸ் குப்தா உள்ளார்.

சரக்கு- சேவை வரி விதிப்பது பற்றி செய்தியாளர்களிடம் நேற்று அசீம் தாஸ் குப்தா கூறியதாவது, மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு சரக்கு- சேவை வரி விதிக்கும் அதிகாரத்தை வழங்க வாட் உயர்நிலை குழுவில் உறுப்பினர்களாக இருக்கும் மாநில நிதி அமைச்சர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். இது தொடர்பாக மாநில நிதி அமைச்சர்கள் அவர்களின் கருத்தை எழுத்து பூர்வமாக கொடுத்த பின், வாட் உயர்நிலை குழு பரிந்துரைக்கு இறுதி வடிவம் கொடுக்கும். இது அநேகமாக மத்திய அரசிடம் டிசம்பர் மாதத்தில் வழங்கப்படலாம்.

சரக்கு- சேவை வரி முறையில் சரக்கு பிரிவுகளுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வரி விகிதங்களின் கீழ் வரி விதிக்கப்படலாம். ஆனால் சேவை பிரிவுக்கு ஒரே வரி மட்டும் இருக்கும். மாநில அளவில் விதிக்கப்படும் சரக்கு- சேவை வரியில், பல்வேறு வரிகள் ஒன்று சேர்க்கப்பட்டு, ஒரே வரியாக விதிக்கப்படும் என்று தாஸ் குப்தா கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்