எல்.ஐ.சி. ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனம் வீட்டு கடனுக்கான பரிசீலனை கட்டணத்தை 50 விழுக்காடு குறைத்துள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோடு நகரத்தில் எல்.ஐ.சி ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனம் வீட்டு கடன் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது. இந்த கண்காட்சி நாளை தொடங்குகிறது.
இது பற்றி கோழிக்கோடு பிராந்தியத்தின் விற்பனை பிரிவு பொது மேலாளர் பி.கே ராத் கூறுகையில்,
இந்த கண்காட்சியை ஒட்டி வீட்டுக் கடன் விண்ணப்பம் மீதான பரிசீலனை கட்டணத்தை 50 விழுக்காடு குறைத்ததுள்ளோம்.
அத்துடன் நவம்பர் 30 ந் தேதி வரை வீட்டு கடன் வாங்குபவர்களுக்கு நிரந்தர வட்டி விகிதத்தை 10.50 விழுக்காட்டில் இருந்து 10.25 விழுக்காடாகவும், மாறும் வட்டி விகிதமும் கால் விழுக்காடு குறைக்கப்படும்.
இந்த கண்காட்சியை கடந்த ஆறு ஆண்டுகளாக நடத்தி வருகின்றோம். இந்த மாதம் ரூ. 20 கோடி கடன் வழங்க முடியும் என்று எதிர்பார்க்கின்றோம் என்று தெரிவித்தார்.
இந்தியாவில் வீட்டு கடன் வழங்கும் நிறுவனங்களில் எல்.ஐ.சி. ஹவுசிங் ஃபைனான்ஸ் இரண்டாவது பெரிய நிறுவனமாக உள்ளது. இது இந்தியாவில் வழங்கப்படும் மொத்த வீட்டு கடனில் 7 விழுக்காடு கடனை வழங்கியுள்ளது.