பணவீககம் 3.07 விழுக்காடு!

Webdunia

வெள்ளி, 26 அக்டோபர் 2007 (14:12 IST)
இந்திய ரூபாயின் பணவீக்கம் அக்டோபர் 13 ந் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 3.07 விழுக்காடாக உள்ளது. இது சென்ற வாரத்தில் இருந்த அதே அளவாகும்.

சென்ற வருடம் இதே காலகட்டத்தில் பணவீக்க விகிதம் 5.46 விழுக்காடாக இருந்தது.

அரசு ஊழியர்கள் மற்றும் தொழிற் சாலை பணியாளர்களுக்கு அகவிலைப்படியை கணக்கிட பயன்படுத்தும் மொத்த விலை அட்டவணையில் 1 புள்ளி அதிகரித்தது. இது அக்டோபர் 13-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 215 புள்ளிகளாக கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய வாரத்தில் 214.7 புள்ளிகளாக இருந்தது.

இந்த அட்டவணையில் உணவுப் பொருட்களின் பிரிவு 0.2 விழுக்காடு அதிகரித்தது. அக்டோபர் 6-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 224.7 புள்ளிகளாக இருந்தது. அக்டோபர் 13-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 225.1 புள்ளிகளாக அதிகரித்துள்ளது.

உணவுப் பொருட்கள் பிரிவில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் குறியீட்டு எண் 0.3 புள்ளி அதிகரித்துள்ளது. இது முந்தைய வாரத்தில் 223.8 புள்ளிகளில் இருந்து 224.5 புள்ளிகளாக அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் இறைச்சி விலை 4 விழுக்காடும், பருப்பு வகைகளின் விலை 2 விழுக்காடும், மீன், பார்லி, கோதுமை. முட்டை ஆகியவற்றின் விலை தலா 1 விழுக்காடும் அதிகரித்ததே.

நேரடி உணவுப் பொருட்கள் அல்லாத மற்ற விவசாய விளை பொருட்களின் அட்டவணை குறியீட்டு எண் 0.6 விழுக்காடு குறைந்தது. இது முந்தைய வாரத்தில் 210.9 விழுக்காட்டில் இருந்து 210.3 விழுக்காடாக குறைந்தது. இதற்கு காரணம் நிலக்கடலை 3 விழுக்காடு, எள், ஆமணக்கு 2 விழுக்காடு, பருத்தி, கொப்பரை தலா 1 விழுக்காடு குறைந்ததே காரணம்.

அதே நேரத்தில் சணல் 10 விழுக்காடு கால்நடை தீவனம் 4 விழுக்காடு, சோயா 3 விழுக்காடு, பதப்படுத்தாத புகையிலை மற்றும் பிராணிகளின் தோல் 2 விழுக்காடு அதிகரித்தது.

நாப்தா 5 விழுக்காடு, பர்னேஷ் ஆயில், தார் தலா 2 விழுக்காடு விலை அதிகரித்தது. இதனால் எரிசக்தி, மின்சாரம், உராய்வு எண்ணையின் அட்டவணை 0.3 விழுக்காடு அதிகரித்தது. இந்த பட்டியலின் விழுக்காடு 323.4 புள்ளிகளாக அதிகரித்தது. இது முந்தைய வாரத்தில் 322.1 புள்ளிகளாக இருந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்