மழை பாதித்த பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.8,000 வழங்க கோரிக்கை!

அண்மையில் பெய்த தொடர் மழையால் சேதமடைந்தப் பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 8 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது!

தஞ்சையில் நடைபெற்ற இச்சங்கத்தின் மாவட்டக் குழுக் கூட்டத்திற்கு சங்கத் தலைவர் ஆர். திருஞானம் தலைமை வகித்தார். செயலர் அ. பன்னீர் செல்வம் சிறப்புரையாற்றினார்.

கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் தஞ்சாவூர் மாவட்டத்தில் நெல், கரும்பு, வாழை மற்றும் இதரப் பயிர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.8 ஆயிரத்தை இழப்பீடாக வழங்க வேண்டும்.

உரத்தட்டுப்பாடு இல்லாமலும், அதிக விலைக்கு விற்கப்படாமலும் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சம்பா அறுவடை பருவத்திற்கு ஏக போக நெல் கொள்முதலை அரசு மேற்கொள்ள வேண்டும். விவசாயத்துக்கு சுயநிதி திட்டத்தின் கீழ் பணம் கட்டி மின் இணைப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்