நீரில் மூழ்கியுள்ள பயிர்களைக் காக்க வழிமுறைகள்!

பயிரிடப்பட்ட சம்பா, தாளடி பயிர்கள் கடந்த சில வாரங்களாக பெய்த தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கியிருந்ததால் அவற்றை காப்பதற்கான வழிமுறைகளை தஞ்சை வேளாண் இணை இயக்குநர் மு. ஜோதி கூறியுள்ளார்!

தஞ்சை, திருவாரூர் போன்ற காவிரி டெல்டா மாவட்டங்களில் பல ஆயிரக்கணக்கான ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.

அவற்றில், 60 நாள் வளர்ந்த பயிர்கள், தண்ணீரில் மூழ்கி மஞ்சள் நிறத்துடன் காணப்பட்டால் 42 கிலோ அம்மோனியம் குளோரைடு அல்லது 50 கிலோ அம்மோனியம் சல்பேட் அல்லது 22 கிலோ யூரியாவுடன் 17 கிலோ பொட்டாஷ் கலந்து இட வேண்டும்.

15 - 20 நாள் இளம் பயிர்கள் வெளிர் மஞ்சள் நிறத்துடன் காணப்பட்டால், 2 கிலோ யூரியா மற்றும் ஒரு கிலோ ஜிங்க் சல்பேட்டை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

கதிர் வரும் பருவத்தில் உள்ள பயிர்கள் மழை நீரில் மூழ்கியிருந்தால், கதிர் விடுவது தாமதமாகும். இதை போக்க ஒரு ஏக்கருக்கு 4 கிலோ டிஏபி, 2 கிலோ யூரியா, 2 கிலோ பொட்டாஷ் ஆகியவற்றை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

பூச்சி, நோய்களிலிருந்து காப்பாற்ற!

தற்போது, நிலவும் அதிக ஈரப்பதம் காரணமாக நெற்பயிரை பூச்சிகள், நோய்கள் தாக்க வாய்ப்பு அதிகம்.

இலை சுருட்டிப்புழு, இருத்துப் பூச்சி, சாறு உறிஞ்சும் பூச்சி ஆகியவை காணப்பட்டால் 6 லிட்டர் வேப்பெண்ணையை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். இதனுடன் 100 மில்லி ஒட்டும் திரவத்தையும் கலந்து தெளிக்க வேண்டும்.

இதேப்போன்று பாக்டீரியல் இலை கருகல் நோய்த் தாக்கினால், 40 கிலோ பசுஞ்சானத்தை 50 லிட்டர் தண்ணீரில் முதல் நாள் இரவே ஊற வைக்க வேண்டும். பின்னர் காலையில் மேலாக உள்ள திரவத்தை எடுத்து 150 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும் என்று தஞ்சை வேளாண் இணை இயக்குநர் மு. ஜோதி கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்