விவசாயிகளை காக்க இறக்குமதியை கட்டுப்படுத்துங்கள் - சரத்குமார்!

வளர்ந்த நாடுகள் தங்கள் விவசாய உற்பத்தியை இந்தியாவில் குவித்து வருகின்றன. இதனால் இந்திய விவசாயிகள் தொடர்ந்து நலிவடைந்து வருகின்றனர். எனவே வெளிநாட்டு இறக்குமதியை கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம் என்று மாநிலங்களவையில் தி.மு.க. உறுப்பினர் சரத்குமார் பேசினார்!

மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் கமல்நாத் ஹாங்காங் நகரில் இன்று நடைபெறும் உலக வர்த்தக மாநாட்டில் கலந்து கொள்கிறார். அவரது பயணத்திற்கு முன்பு அவருக்கு கோரிக்கை விடுத்து மாநிலங்களவையில் நேற்று தி.மு.க. உறுப்பினர் ஆர். சரத்குமார் பேசினார்.

இந்தியாவின் சமூக பொருளாதார வளர்ச்சி நிலை விவசாயத்தை சார்ந்தே உள்ளது. நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் விவசாயத்தை சார்ந்தே உள்ளனர். அதாவது 71 கோடி மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்கின்றனர்.

இவ்வாறு நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் விவசாயிகள் பெரும் பங்கு ஆற்றிவரும் போதிலும், பல்வேறு விதங்களில் அவர்கள் புறக்கணிப்பட்டு வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளில் நாடு முழுவதும் 4,500 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இந்திய விவசாய குடும்பத்தின் சராசரி ஆண்டு வருமானம் ரூ.12,585 ஆகவே உள்ளது. தொடர்ந்து அவர்கள் பசியிலும், வறுமையிலும் வாடி வருகின்றனர். அவர்களுக்கு கடன் வழங்குவதிலும் வங்கிகள் தயக்கம் காட்டுகின்றன.

இதுபோன்ற பல்வேறு காரணங்களால் இந்திய விவசாயிகள் நலிவடைந்து வரும் நிலையில், இந்திய வெளிநாட்டு இறக்குமதி கொள்கை அவர்களை மேலும் பாதிப்படைய செய்து வருகிறது. தாராளமய கொள்கையால் வளர்ந்த நாடுகள், அவர்களது அதிகப்படியான விவசாய உற்பத்தியை இந்தியாவில் கொண்டு வந்து குவித்து வருகின்றன. இதனால் இங்குள்ள விவசாயிகளின் உற்பத்திப் பொருட்கள் தேக்கமடைகின்றன.

சிறு மற்றும் குறு விவசாயிகள் பெரும் நட்டத்தை சந்திக்கின்றனம்h. வெளிநாட்டு இறக்குமதி விவசாய பொருட்கள் குறைந்த விலைக்கு விற்கப்படுவதால் இந்திய உற்பத்திப் பொருட்கள் பின்னுக்கு தள்ளப்படுகின்றன. பல ஆண்டுகளாக இந்த நிலை நீடித்து வருகிறது.

எனவே இத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் வெளிநாட்டு விவசாய இறக்குமதியை கட்டுப்படுத்த வேண்டும். இந்திய விவசாயிகளை முன்னேற்றும் விதத்தில் அவர்களை பொருளாதார பலம்மிக்கவர்களாக மாற்றும் விதத்தில் புதிய கொள்கையை உருவாக்க வேண்டும்.

ஹாங்காங் உலக வர்த்தக மாநாட்டில் கலந்துகொள்ளச் செல்லும் உங்களுக்கு 70 கோடி இந்திய விவசாயிகளை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்துகிறேன். இவ்வாறு சரத்குமார் பேசினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்