ரூ.2,092 கோடி செலவில் சிறு பாசனத் திட்டங்கள்!

இந்தியா முழுவதும் 10வது ஐந்தாண்டுத் திட்டத்தில் நிறைவேற்ற ஒப்புக்கொள்ளப்பட்ட சிறு பாசனத் திட்டங்களை ரூ.2,092 கோடி செலவில் நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது!

தலைநகர் டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட இம்முடிவை செய்தியாளர்களிடம் நிதியமைச்சர் ப. சிதம்பரம் அறிவித்தார்.

மத்திய, மாநில அரசுகளும், அந்தந்தப் பகுதிகளின் விவசாயிகளும் பங்களித்து நிறைவேற்றப்படக் கூடிய சிறு பாசன திட்டங்களுக்கு மத்திய அரசு தனது பங்காக ரூ.850 கோடியும், மாநில அரசுகள் ரூ.207 கோடியும், மீதத் தொகையை திட்டத்தால் பயன்பெறும் அப்பகுதி விவசாயிகளும் அளிப்பார்கள் என்று ப. சிதம்பரம் கூறினார்.

2005-06 நிதிநிலை அறிக்கையில் சிறு பாசனத் திட்டங்களுக்காக ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அடுத்த நிதிநிலை அறிக்கையில் ரூ.450 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இத்திட்டத்தின் கீழ் நிறைவேற்றப்படும் சிறு பாசன அமைப்புகளால் நாடு முழுவதும் 6.2 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

சொட்டு நீர் மற்றும் தூவல் நீர் பாய்ச்சி செய்யப்படும் விவசாயங்களுக்கு பலனளிக்கும் வகையில் இந்த சிறு பாசனத் திட்டங்கள் நிறைவேற்றப்படும்.

வெப்துனியாவைப் படிக்கவும்