பங்குச் சந்தைகளில் இன்றும் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது பிரிவு குறியீட்டு எண்கள் அதிகரித்தது.
ஆனால் ஒரே சீராக இல்லாமல் கடுமையான ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. இந்திய பங்குச் சந்தைகளில் கடந்த இரண்டு நாட்களாக இருந்த நிலையே, இன்றும் தொடரும் என்று தெரிகிறது.
கடந்த இரண்டு நாட்களாக, இரண்டு பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண்களும் சரிந்தன. அத்துடன் பங்குச் சந்தை அதிக ஏற்ற இறக்கத்துடன் இருந்தது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச நிதியம் (ஐ.எம்.எப்), இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறையும் 0.6% குறையும் என்று அறிவித்துள்ளது. பொருளாதார வளர்ச்சி 6.3% இருக்கும் என்று கூறியுள்ளது.
கடந்த சில வாரங்களாக குறைந்து வந்த பணவீக்கம், தற்போது உயர துவங்கியுள்ளது. மத்திய அரசு நேற்று அக்டோபர் 25 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பணவீக்கம் 10.72 விழுக்காடு என்று அறிவித்துள்ளது. இதற்கு முந்தைய வாரம் பணவீக்கம் 10.68% ஆக இருந்தது.
பணவீக்கம் ஒற்றை இலக்காக குறையும் என்ற எதிர்பார்ப்பு வர்த்தகர்கள் உட்பட பல்வேறு தரப்பினரிடமும் இருந்தது.
இது அதிகரித்து இருப்பதாக வந்துள்ள செய்தி, பங்குச் சந்தையையும் பாதித்து. தொழில் துறையில் உற்பத்தியில் ஈடுபட்ட நிறுவனங்கள், விற்பனை குறைந்ததால், உற்பத்தியை குறைத்து வருகின்றன. இவை வாரத்தில் சில நாட்கள் விடுமுறை அளிப்பதாக அறிவித்துள்ளன.
இன்று காலை பங்குச் சந்தைகளில் 10.05 மணியளவில் தகவல் தொழில் நுட்ப பிரிவு தவிர, மற்ற பிரிவு குறியீட்டு எண்கள் அதிகரித்தன. நிஃப்டி 35.35, சென்செக்ஸ் 63.11 புள்ளிகள் அதிகரித்தது.
அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று டோவ் ஜோன்ஸ் 443.48, எஸ் அண்ட் பி 500-47.89, நாஸ்டாக் 72.94 புள்ளிகள் குறைந்தது.
அமெரிக்காவின் பங்குச் சந்தையில் 1987 ஆம் ஆண்டிற்கு பிறகு, முதன் முறையாக அதிக அளவு குறியீட்டு எண்கள் குறைந்துள்ளன. தொழில், வர்த்தக நிறுவனங்களில் வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இது போன்ற காரணங்களினால் அமெரிக்க பங்குச் சந்தையும் பாதிக்கப்பட்டது.
ஐரோப்பிய நாடுகளில் எல்லா பங்குச் சந்தைகளில் பாதகமான நிலை இருந்தது. பிரிட்டனின் எப்.டி.எஸ் இ 100-258.32 புள்ளிகள் குறைந்தது.
காலை 10.30 மணியளவில் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 2 (0.08% ) புள்ளிகள் குறைந்து, குறியீட்டு எண் 2890.35 ஆக குறைந்தது.
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 66.29 (0.68% ) புள்ளிகள் குறைந்து, குறியீட்டு எண் 9,667.93 ஆக குறைந்தது.
இதே போல் மிட் கேப் 28.78, சுமால் கேப் 16.39, பி.எஸ்.இ. 500- 19.76 புள்ளிகள் குறைந்தன.
இன்று காலை ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகளில், சிலவற்றில் குறியீட்டு எண் அதிகரித்தும், சிலவற்றில் குறைந்தும் இருந்தன.
ஹாங்காங்கின் ஹாங்செங் 78.46, தென்கொரியாவின் சியோல் காம்போசிட் 17.53, சீனாவின் சாங்காய் காம்போசிட் 1.47 புள்ளிகள் அதிகரித்தன.
ஆனால் ஜப்பானின் நிக்கி 182.52, சிங்கப்பூரின் ஸ்டெர்ய்ட் டைம்ஸ் 10.54 புள்ளிகள் குறைந்தன.
மும்பை பங்குச் சந்தையில் காலை 10.30 மணியளவில் 598 பங்குகளின் விலை அதிகரித்தும், 981 பங்குகளின் விலை குறைந்து இருந்தது. 38 பங்குகளின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.
அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் நேற்று ரூ. 511.53 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.
உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்களும் ரூ.351.57 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன. இந்த வருட துவக்கத்தில் இருந்து, நேற்று வரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.97, 325.57 கோடி மதிப்புள்ள விற்பனை செய்துள்ளன.
அதே நேரத்தில் ஆறுதல் அளிக்கும் செய்தியாக, சிறு முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்குவது கணிசமாக உள்ளது. பங்குச் சந்தையை கட்டுப்படுத்தும் செபி செப்டம்பர் முதல் தேதி முதல் அக்டோபர் 23 ஆம் தேதி வைர ஆய்வு செய்துள்ளது. இந்த நாட்களில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.18,800 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளது.
இதே காலகட்டத்தில் சிறு முதலீட்டாளர்கள் ரூ.4,100 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.