பங்குச் சந்தைகளில் சரிவு!

வெள்ளி, 3 அக்டோபர் 2008 (11:22 IST)
பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே குறியீட்டு எண்கள் குறைந்தன.

அமெரிக்காவில் நஷ்டமடைந்த நிதி, முதலீடு, வங்கிகளுக்கு நிதி உதவி செய்யும் புஷ் நிர்வாகத்தின் 700 பில்லியன் டாலர் மசோதா, நேற்று செனட்டில் நிறைவேறியுள்ளது. புதிதாக அந்நாட்டு தொழில் நிறுவனங்களுக்கு 100 பில்லியன் டாலர் வரி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மசோதா இன்று (இந்திய நேரப்படி இரவு) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இது நாடாளுமன்றத்திலும் நிறைவேறும் என்று தெரிகிறது.

இந்த மசோதா செனட்டில் நிறைவேறியதால், உடனடியாக அமெரிக்க பங்குச் சந்தைகளில் எவ்வித பாதிப்பும் இல்லை நேற்று அமெரிக்க பங்குச் சந்தையின் குறியீட்டு எண்கள் குறைந்தன. அதே நேரத்தில் அமெரிக்க அரசு அறிவித்துள்ள புள்ள விபரங்களின் படி ஆகஸ்ட் மாதத்தில் தொழில்துறை உற்பத்தி 4% குறைந்துள்ளது. வேலை இல்லாத உதவி தொகை பெறுபவர்களின் எண்ணிக்கை 3.59 மில்லியனாக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவின் ஏற்றுமதியை நம்பியுள்ள நாடுகளின் பொருளாதாரமும் பாதிக்கப்படும். அத்துடன் இதன் நெருக்கடி மற்ற நாடுகளின் நிதிச் சந்தையிலும் நெருக்கடியை உண்டாக்கியுள்ளது. இதனால் இந்தியா உட்பட மற்ற நாட்டு பங்குச் சந்தைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்க பங்குச் சந்தையின் குறியீட்டு எண்கள் நேற்று 4% குறைந்தது. டோவ்ஜோன்ஸ் 348.22, நாஸ்டாக் 92.68 புள்ளிகள் குறைந்தது.

ஐரோப்பாவிலும் நேற்று எல்லா பங்குச் சந்தைகளிலும் பாதகமான நிலை நிலவியது. பெல்ஜியம், சுவிட்சர்லாந்து தவிர மற்ற பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் குறைந்தன. பிரிட்டனின் எப்.டி.எஸ் இ 100-89.25 புள்ளிகள் குறைந்தது.

காலை 10.33 மணியளவில் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 55.65 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 3895.10 ஆக குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 202.99 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 12,852.68 ஆக சரிந்தது.

இதே போல் மிட் கேப் 34.52, சுமால் கேப் 26.28, பி.எஸ்.இ. 500- 65.36 புள்ளிகள் குறைந்தன.

ஆனால் இன்று காலை ஆசிய பங்குச் சந்தைகளில் பாதகமான நிலையே நிலவியது.

ஹாங்காங்கினஹாங்செங் 386.31, ஜப்பானின் நிக்கி 149.69, சிங்கப்பூரின் ஸ்டெர்ய்ட் டைம்ஸ் 52.63, தென்கொரியாவின் சியோல் காம்போசிட் 20.02 புள்ளிகள் குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் காலை 10.37மணியளவில் 651 பங்குகளின் விலை அதிகரித்தும், 1032 பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது. 44 பங்குகளின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் 1 ஆம் தேதி 274.90 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் 48.65 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

காலை வர்த்தகத்தில் உலோக உற்பத்தி, தகவல் தொழில் நுட்பம், ரியல் எஸ்டேட், பெட்ரோலிய நிறுவனங்கள், தகவல் தொழில் நுட்பம் வங்கி பிரிவு குறியீட்டு எண்கள் குறைந்து இருந்தது.

அந்நியச் செலாவணி சந்தையில் வர்த்தகம் தொடங்கும் போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 68 பைசா குறைந்தது. கடந்த ஐந்து வருடங்களில் இல்லாத அளவாக 1 டாலரின் மதிப்பு ரூ.47.30-47.31 பைசாவாக அதிகரித்து.

இன்று இந்திய பங்குச் சந்தைகளில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிக குறைந்த அளவே உள்ளது.

நியூயார்க் முன்பேர சந்தையில் நவம்பர் மாத பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை 1 பீப்பாய்க்கு 4.56 டாலர் குறைந்தது. நேற்று இதன் விலை பீப்பாய் 93.56 குறைந்தது. ஐரோப்பாவில் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 90.13 டாலராக குறைந்தது. இதன் விலை உலக சந்தையில் குறைந்தாலும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால் இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்க்கு, உள்நாட்டு விலையில் எவ்வித மாற்றமும் இருக்காது.

வெப்துனியாவைப் படிக்கவும்