பங்குச் சந்தையில் சரிவு!

திங்கள், 1 செப்டம்பர் 2008 (10:50 IST)
தேசிய, மும்பை பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே குறியீட்டு எண்கள் சரிந்தன.

கடந்த வாரம் தொடர்ந்து சரிந்து வந்த பங்குச் சந்தையிலவெள்ளிக் கிழமை மாற்றம் ஏற்பட்டது. ஆனால் இன்று மீண்டும் பங்குச் சந்தையில் சில பிரிவுகள் தவிர மற்றவை குறைந்தன.

மெக்ஸிகோவில் ஏற்பட்டுள்ள புயல் ஆபத்தால், கச்சா எண்ணெய் உற்பத்தி குறைந்துள்ளது. இதனால் இதன் விலை மீண்டும் ஏறு முகத்தில் உள்ளது. அமெரிக்கா வெளியிட்டுள்ள புள்ளிவிபரப்படி, அங்கு தனிநபர் வருவாய் குறைந்துள்ளது. இதனால் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி பாதிக்கப்படும். இது போன்ற காரணங்களினால் அமெரிக்க பங்குச் சந்தையின் மூன்று குறீயீட்டு எண்களும் குறைந்தன.

இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால் பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ள அந்நிய முதலீட்டு நிறுவனங்களின் வருவாய் குறையும்.

இன்று ஆசியாவில் எல்லா பங்குச் சந்தைகளும் காலையில் சரிவை சந்தித்தன. இதே போல் இந்திய பங்குச் சந்தையிலும் குறியீட்டு எண்கள் குறைந்துள்ளன.

ஆனால் நண்பகலுக்கு பிறகு நிலைமை மாறுவதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. ஏனெனில் வெள்ளிக் கிழமை வாங்கிய பங்குகளை விற்பனை செய்து இலாப கணக்கு பார்ப்பார்கள். இவர்கள் மதியத்திற்கு பிறகு வாங்குவதற்கு வாய்ப்பு உண்டு.

மும்பை பங்குச் சந்தையில் காலை 10.30 மணியளவில் 788 பங்குகளின் விலைகள் அதிகரித்து இருந்தது. 916 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 63 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.

காலை 10.30 மணிக்கு மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 119.84 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 14,444.69 ஆக குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 42.35 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 4327.65 ஆக குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 1.88 புள்ளி அதிகரித்தது. ஆனால் சுமால் கேப் 0.46, பி.எஸ்.இ. 500- 29.42 புள்ளி குறைந்தது.

இன்று காலை நடந்த வர்த்தகத்தில் தகவல் தொழில் நுட்பம், மிட்கேப் பிரிவு விலை அதிகரித்தது.

அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் வெள்ளிக் கிழமை நடந்த வர்த்தகத்தில் ரூ.2,596.50 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.2,963.11 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன.

இவை வெள்ளிக் கிழமை ரூ.364.61 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.975.75 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.694.68 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

இவை நேற்று ரூ.281.07 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

ஆகஸ்ட் மாதம் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் 5,456.11 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

இந்த வருட துவக்கத்தில் இருந்து ஆகஸ்ட் மாதம் இறுதி வரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.69,222.12 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.48,177.04 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

ஐரோப்பாவில் வெள்ளிக் கிழமை எல்லா பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண் அதிகரித்தது. பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ 100- 35.40 புள்ளி அதிகரித்தது.

அமெரிக்க பங்குச் சந்தையில் வெள்ளிக் கிழமை நடந்த வர்த்தகத்தில் டோவ் ஜோன்ஸ் 171.63, நாஸ்டாக் 44.12, எஸ்.பி-500-17.85 புள்ளி குறைந்தது.

இன்று ஆசிய நாடுகளில் எல்லா பங்குச் சந்தைகளிலும் பாதகமான நிலை இருந்தது.

சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 28.10, சீனாவின் சாங்காய் காம்போசிட் 62.88, பிலிப்பைன்சின் பி.எஸ்.இ காம்போசிட் 1.57, ஜப்பானின் நிக்கி 223.93, ஹாங்காங்கின் ஹாங்செங் 350.41, தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 49.31, தைவான் வெயிட் 237.89 புள்ளி குறைந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்