பங்குச் சந்தைகளில் உயர்வு!

புதன், 23 ஜூலை 2008 (11:19 IST)
மும்பை தேசிய பங்குச் சந்தைகளில் இன்று காலை வர்த்தகம் தொடங்கும் போதே எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்தன.

மக்களவையில் மத்திய அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் நேற்று வெற்றி பெற்றது. இதனால் பொருளாதார சீர்திருத்தம் மேலும் முன்னெடுத்து‌ச் செல்லப்படும் என்ற நம்பிக்கை தொழில், வர்த்தக துறை வட்டாரங்களில் அதிகரித்துள்ளது.

குறிப்பாக காப்பீடு நிறுவனங்களில் அந்நிய நேரடி முதலீடு அதிகரிப்பு, வங்கிகளில் தற்போது உள்ள வாக்குரிமை அதிகரிப்பு, ஓய்வு கால நிதி நிறுவனங்களில் அந்நிய முதலீட்டுக்கு அனுமதி ஆகியவைகளுக்கு தேவையான சட்ட திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வரும் என்று தெரிகிறது. இதுவரை இந்த சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு மத்திய அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுத்து வந்த இடது சாரி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.

இடதுசாரி கட்சிகள் ஆதரவை விலக்கிக் கொண்டதால், காங்கிரஸ் அரசு பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை முனனேடுத்துச் செல்லும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அத்துடன் ஆசிய சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை 1 பீப்பாய் 128.38 டாலராக குறைந்தது.

இது போன்ற காரணங்களினால் இன்று பங்குச் சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே பங்கு விலைகள் அதிகரித்தன.

மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலை 10 மணியளவில் சென்செக்ஸ் 636 புள்ளிகள் உயர்ந்து குறியீட்டு எண் 14,739.79 ஆகவும், நிஃப்டி 181.35 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 4421.45 ஆக அதிகரித்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை 10.30 மணி நிலவரப்படி 1633 பங்குகளின் விலைகள் அதிகரித்து இருந்தது. 249 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 33 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.

இன்று வங்கி, ரியல் எஸ்டேட், மின் உற்பத்தி, உலோக உற்பத்தி, பொதுத் துறை நிறுவன பிரிவு குறியீட்டு எண்கள் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்து இருந்தன. தகவல் தொழில் நுட்ப பிரிவில் மட்டும் மந்த நிலை நிலவியது.

நேற்று அமெரிக்க பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள இந்திய நிறுவன பங்குகளின் விலையும் அதிகரித்தது.

ஆசிய சந்தைகளிலும் சாதகமான போக்கு நிலவுவதால், இன்று பங்குச் சந்தையில் எவ்வித பின்னடைவும் இருக்காது என்றே தெரிகிறது.

காலை 10.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 547.90 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 14,652.10 ஆக அதிகரித்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 160.70 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 4400.80 ஆக உயர்ந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 169.40 சுமால் கேப் 182.05 பி.எஸ்.இ. 500- 209.22 புள்ளி அதிகரித்தது.

நேற்று நடந்த வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.2,113.75 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.2,711.10 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன. இவை நிகரமாக ரூ.597.35 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.1,368.14 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.1,106.53 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன. நிகரமாக ரூ.261.61 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

ஜூலை மாதத்தில் நேற்று வரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் 4,223.42 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

இந்த வருட துவக்கத்தில் இருந்து நேற்று வரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.63,385.42 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

ஐரோப்பாவில் நேற்று சில பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண்கள் அதிகரித்து இருந்தன. சிலவற்றில் குறைந்து இருந்தன. பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ 100- 40.20 புள்ளி குறைந்தது.

அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று நடந்த வர்த்தகத்தில் டோவ் ஜோன்ஸ் 135.16 நாஸ்டாக் 24.43 புள்ளி அதிகரித்தது. எஸ் அண்ட் பி500- மாற்றமில்லை.

இன்று ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகளில் இந்தோனேஷியா த‌விர மற்றவைகளில் குறியீட்டு எண் அதிகரித்தது.

தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 36.98, ஹாங்காங்கின் ஹாங்சாங் 475.62, சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 65.22, சீனாவின் சாங்காய் காம்போசிட் 8.78, ஜப்பானின் நிக்கி 162.27, அதிகரித்து இருந்தது. இந்தோனேஷியாவின் ஜகர்த்தை காம்போசிட் 0.77 குறைந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்