பங்குச் சந்தைகளில் ஏற்ற இறக்கம்!

செவ்வாய், 17 ஜூன் 2008 (11:25 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் இன்று காலை வர்த்தகம் ஆரம்பிக்கும் போது எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்தன. ஆனால் அடுத்த ஐந்தாவது நிமிடத்திலேயே, சென்செக்ஸ், நிஃப்டி குறியீட்டு எண்கள் குறைய துவங்கின.

மற்ற பிரிவு குறியீட்டு எண்கள் நேற்றைய இறுதி நிலவரத்தைவிட குறைந்தன. காலை 10.05 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 18 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 15,378.25 ஆக இருந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 3 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 4,575.40 ஆக இருந்தது.

ஆசியாவில் ஜப்பான் தவிர மற்ற நாட்டு சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் குறைந்தன. அமெரிக்கா, ஐரோப்பிய சந்தைகளில் நேற்று பாதகமான நிலை இருந்தது.

நேற்று பங்குச் சந்தையில் பங்குகளின் விலைகள் அதிகரித்தாலும், வர்த்தகம் குறைந்த அளவே நடந்தது. குறிப்பாக அந்நிய நிறுவனங்கள் பங்குகளை விற்பனை செய்வதில் ஆர்வம் காட்டின. நியுயார்க் சந்தையில் ஜூலை மாதத்திற்கான பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை 1 பீப்பாய் 140 டாலராக அதிகரித்தது. அத்துடன் யூரோவிற்கு நிகரான அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்தது.

இந்தியாவில் ரிசர்வ் வங்கி ரிபோ வட்டி விகிதம் சென்ற வாரம் அதிகரித்தது. இதனால் வங்கி வட்டி விகிதம் உயரும். அத்துடன் பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வினால் பணவீக்கம் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இது போன்ற காரணங்களினால் பங்குச் சந்தையில் பாதகமான போக்கே நிலவுகிறது. இன்று காலையில் வர்த்தகம் தொடங்கியதில் இருந்து எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிக ஏற்ற இறக்கத்துடன் உள்ளன.


மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை 10.35 மணி நிலவரப்படி 1109 பங்குகளின் விலைகள் அதிகரித்து இருந்தது. 781 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 75 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.

காலை 10.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 2.31 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 15,398.13 ஆக இருந்தது.

இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 0.80 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 4573.30 ஆக இருந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 28.84, சுமால் கேப் 37.72, பி.எஸ்.இ. 500- 9.66 புள்ளி அதிகரித்தது.

நேற்று நடந்த வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.2,297.68 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.2,845.52 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன. இவை நிகரமாக ரூ.547.84 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன.

உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.794.64, கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.501.59 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன. நிகரமாக ரூ.293.05 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

இந்த வருட துவக்கத்தில் இருந்து நேற்று வரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.54,753.54 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் நேற்று குறியீட்டு எண்கள் குறைந்தன. பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ 100-8.20 புள்ளி குறைந்தது.

அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று நடந்த வர்த்தகத்தில் டோவ் ஜோன்ஸ் 38.27 புள்ளி குறைந்தது. அதே நேரத்தில் எஸ் அண்ட் பி 500-20.28, நாஸ்டாக் 0.11 புள்ளி அதிகரித்தது.

இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் சிலவற்றில் குறியீட்டு எண் குறைந்தும். சிலவற்றில் அதிகரித்தும் இருந்தன. ஜப்பான் பங்குச் சந்தையின் நிக்கி 31.82 அதிகரித்தது.

தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 10.21, சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 19.90, ஹாங்காங்கின் ஹாங்செங் 1.14, சீனாவின் சாங்காய் காம்போசிட் 25.06 புள்ளி குறைந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்