மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் இன்று காலை வர்த்தகம் ஆரம்பிக்கும் போதே எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் குறைந்தன.
காலை 10.05 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 403 புள்ளிகள் சரிந்து குறியீட்டு எண் 14,781.37 ஆக இருந்தது.
இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 114.85 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 4,408 ஆக குறைந்தது.
ரிசர்வ் வங்கி நேற்று வங்கிகளின் வட்டி விகிதத்தை அதிகரித்தது. இதனால் கடன் மீதான வட்டியும் அதிகரிக்கும். இத்துடன் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்தது.
இன்று ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளும், நேற்று ஐரோப்பிய, அமெரிக்க பங்குச் சந்தைகள் சரிவை சந்தித்ததால், இன்று மும்பை, தேசிய பங்குச் சந்தைகள் காலையிலேயே சரிவைச் சந்தித்தன. வங்கி, ரியல் எஸ்டேட் பிரிவு பங்குகள் அதிக அளவு பாதிக்கப்பட்டன.
ரிசர்வ் வங்கி பொருளாதார வளர்ச்சியை விட, பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில், அதன் கொள்கைகளை மாற்றியுள்ளது. இனி வரும் நாட்களில் ரிசர்வ் வங்கியின் நடவடிக்கை மேலும் கடுமையாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இதனால் பணப்புழக்கம் கட்டுப்படுத்தப்படுவதுடன், கடன் மீதான வட்டியும் அதிகரிக்கும். இதன் பாதிப்பு காலையிலேயே பங்குச் சந்தையில் எதிரொலித்தது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் 10.55 மணி நிலவரப்படி 547 பங்குகளின் விலைகள் அதிகரித்து இருந்தது. 1398 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 59 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.
காலை 10.50 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 348.50 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 14,836.82 ஆக இருந்தது.
இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 97.30 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 4426.30 ஆக இருந்தது.
மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 88.49, சுமால் கேப் 81.78, பி.எஸ்.இ. 500- 122.16 புள்ளி குறைந்தது.
நேற்று நடந்த வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.3,768.09 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.3,985.36 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன. இவை நிகரமாக ரூ.217.27 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன.
உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.1,158.45 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.611.98 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன. நிகரமாக ரூ.546.47 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.
இந்த வருட துவக்கத்தில் இருந்து நேற்று வரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.52,877.99 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.
ஐரோப்பிய பங்குச் சந்தைகளிலும் நேற்று குறியீட்டு எண்கள் குறைந்தன. பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ 100-116.91 புள்ளி குறைந்தது.
அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று நடந்த வர்த்தகத்தில் டோவ் ஜோன்ஸ் 205.99, எஸ் அண்ட் பி 500-22.95, நாஸ்டாக் 54.93 புள்ளி குறைந்தது.
இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போது ஜப்பான் பங்குச் சந்தையின் நிக்கி 317.31, சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 64.85, ஹாங்காங்கின் ஹாங்செங் 517.67, தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 33.43, சீனாவின் சாங்காய் காம்போசிட் 98.30 புள்ளி குறைந்தது.