மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே, குறியீட்டு எண்கள் சரிந்தன. தேசிய பங்குச் சந்தையில் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் சரிந்தன. மும்பை பங்குச் சந்தையிலும் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் குறைந்தது.
பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை நேற்று நியுயார்க் சந்தையின் முன்பேர வர்த்தகத்தில், ஜூன் மாதத்திற்கான விலை 1 பீப்பாய் 135 டாலராக அதிகரித்தது. அத்துடன் தங்கத்தின் விலையும் அதிகரித்தது. முதலீட்டாளர்களின் கவனம் பங்குச் சந்தையில் இருந்து, கச்சா எண்ணெய், தங்கம் போன்றவற்றில் திரும்பியுள்ளது. இதனால் பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண்கள் தொடர்ந்து குறைந்து வருகின்றன.
அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை அதிக அளவு விற்பனை செய்வதால், இந்திய பங்குச் சந்தையிலும் பங்குகளின் விலைகள் குறைந்து வருவதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
இன்று வர்த்தகம் தொடங்கும் போது வங்கி, ரியல் எஸ்டேட், உலோக உற்பத்தி, பெட்ரோலிய நிறுவனங்கள், மின் உற்பத்தி பிரிவு பங்குகள் அதிக அளவு பாதிக்கப்பட்டன.
காலை 10 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 213 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 17,029.69 ஆக இருந்தது.
இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 67 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 5,050.30 ஆக குறைந்தது.
இன்று ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே குறியீட்டு எண்கள் சரிந்தன. நேற்று அமெரிக்கா, ஐரோப்பிய பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் சரிந்து இருந்தன.
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் 606 பங்குகளின் விலைகள் அதிகரித்து இருந்தது. 1229 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 38 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.
காலை 10.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 297.03 புள்ளி சரிந்து குறியீட்டு எண் 16,946.13 ஆக குறைந்தது.
இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 83.65 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 5034.00 ஆக இருந்தது.
மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 65.99, பி.எஸ்.இ. 500- 102.31, சுமால் கேப் 62.44 புள்ளி குறைந்தது.
நேற்று நடந்த வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.2,849.90 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.3,625.63 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன. இவை நிகரமாக ரூ.776.63 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.
உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.1,404.08 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.951.42 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன. நிகரமாக ரூ.452.66 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.
இந்த வருட துவக்கத்தில் இருந்து நேற்று வரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.41,414.78 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.
அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று நடந்த வர்த்தகத்தில் டோவ் ஜோன்ஸ் 227.49, நாஸ்டாக் 43.99, எஸ் அண்ட் பி-500 22.69 புள்ளி குறைந்தது.
இன்று ஹாங்காங்கின் ஹாங்செங் 517.49, சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 35.21, ஜப்பான் பங்குச் சந்தையின் நிக்கி 36.37, தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 19.71, சீனாவின் சாங்காய் காம்போசிட் 50.48 புள்ளிகள் குறைந்தன.