காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே இரண்டு பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் குறைந்தன. சென்செக்ஸ் 89 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 16,650.40 ஆக இருந்தது.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 23 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 5013.50 ஆக இருந்தது.
இன்று காலையில் வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே, இரண்டு பங்குச் சந்தைகளிலும் சென்செக்ஸ், நிஃப்டி பிரிவு குறியீட்டு எண்கள் குறைந்தாலும், மற்ற பிரிவுகளில் பாதிப்பு இல்லை.
காலை 10.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 37.49 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 16,701.84 ஆக இருந்தது.
இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 8 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 5029.55 ஆக இருந்தது.
மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 42.73, பி.எஸ்.இ. 500- 9.93, சுமால் கேப் 55.27 புள்ளிகள் அதிகரித்தது.
மும்பை பங்குச் சந்தையில் 1275 பங்குகளின் விலைகள் அதிகரித்து இருந்தது. 659 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 41 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.
இரண்டு பங்குச் சந்தைகளிலும் தகவல் தொழில் நுட்பம், தொழில் நுட்ப பிரிவு தவிர மற்ற எல்லா பிரிவு குறியீட்டு எண்கள் ஒரு விழுக்காடுக்கும் அதிகமாக அதிகரித்து இருந்தன.
நேற்று நடந்த வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.2,855.94 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. ரூ.2,686.28 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன. இவை நிகரமாக ரூ.169.66 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.
அதே போல் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.947.70 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.836.12 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன. நிகரமாக ரூ.111.58 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.
அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று நடந்த வர்த்தகத்தில் டோவ் ஜோன்ஸ் 24.34, எஸ்.அண்ட் பி 500-2.16 புள்ளி குறைந்தது. ஆனால் நாஸ்டாக் 5.07 புள்ளி அதிகரித்தது.
ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 6.58, ஹாங்காங்கின் ஹாங்செங் 198.60, சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 12.38, ஜப்பானின் நிக்கி 144.06 குறைந்தது.
கடந்த இரண்டு நாட்களாக இந்தியா உட்பட அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பிய நாடுகளின் சந்தைகளில் குறியீட்டு எண்கள் அதிகரித்தன. நேற்று ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் முதலீட்டு நிறுவனங்கள் இலாப கணக்கு பார்த்ததால் பங்குகளை விற்பனை செய்தனர். இதனால் குறியீட்டு எண்கள் குறைந்தன.
இன்று இந்திய பங்குச் சந்தைகளில் முதலீட்டு நிறுவனங்கள் இலாப கணக்கு பார்க்கும் போக்கு தொடர்கிறது. இதனால் பங்குகளின் விலையில் ஏற்ற இறக்கம் காணப்படுகிறது. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி பிரிவில் உள்ள சில பங்குகளின் விலை குறைந்ததால், இதன் குறியீட்டு எண்கள் குறைந்தன.
அதே நேரத்தில் மற்ற பிரிவில் உள்ள குறியீட்டு எண்கள் குறையவில்லை என்பது கவனிக்கத்தக்கது.