பங்குச் சந்தைக‌ளி‌ல் கடும் சரிவு!

வியாழன், 13 மார்ச் 2008 (11:25 IST)
பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே இரண்டு பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் கடுமையான அளவு சரிந்தன.

இந்தியாவி‌ல் மட்டுமல்லாமல், அமெரிக்கா, ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகளிலும் கடும் சரிவு காணப்பட்டது.

இந்த அந்நிய நாட்டு பங்குச் சந்தைகளில் நேற்று குறியீட்டு எண்கள் அதிகரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

காலை பங்குச் சந்தையில் வர்த்தகம் தொடங்கும் போது 10.05 மணியளவில் சென்செக்ஸ் 417 புள்ளியும், நிஃப்டி 137 புள்ளியும் சரிந்து இருந்தது.

சென்செக்ஸ், நிப்டி பிரிவில் உள்ள பங்குகள் மட்டுமல்லாமல், இரண்டு பங்குச் சந்தைகளிலும் எல்லா குறியீட்டு எண்களும் சரிந்தன.

காலை 11 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 544.34 புள்ளிகள் சரிந்து குறியீட்டு எண் 15,583.64 ஆக குறைந்தது.

இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 178 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 4,694 ஆக குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 212.12, சுமால் கேப் 261.63, பி.எஸ்.இ. 500-216.13 புள்ளிகள் சரிந்தன.

தேசிய பங்குச் சந்தையில் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் 3 விழுக்காட்டிற்கு மேல் சரிந்தன.

அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று டோவ் ஜோன்ஸ் 46.57, நாஸ்டாக் 11.89 எஸ் அண்ட் பி 11.88 புள்ளிகள் குறைந்து இருந்தன.

ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 46.61, ஹாங்காங்கின் ஹாங்செங் 715.47, ஜப்பானின் நிக்கி 461.93, சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 72.46, சீனாவின் சாங்காய் காம்போசிட் 191.39 புள்ளிகள் சரிந்தது.

மற்ற நாட்டு பங்குச் சந்தைகளிலும், குறிப்பாக ஆசிய, அமெரிக்க பங்கு சந்தைகளிலும் பாதகமான போக்கு இருப்பதால் இந்திய பங்குச் சந்தை சரிந்தன.

மத்திய புள்ளி விபர அமைப்பு நேற்று, இந்திய தொழில் துறை வளர்ச்சி கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது, மிக குறைவாக இருக்கும் விபரத்தை வெளியிட்டது. தொழில் துறையின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதால், இந்நிறுவனங்களின் வருவாய் குறையும். இது போன்ற காரணங்களினால் இன்று பங்கு சந்தை கடும் சரிவை சந்தித்தது.

இந்திய பங்குச் சந்தையில் வர்த்தகம் துவங்கிய பிறகு, ஐரோப்பிய பங்குச் சந்தை துவங்கும். இதன் நிலைமையை பொறுத்தே மதியத்திற்கு மேல் மாற்றம் ஏற்படுமா என்பது தெரியவரும்.

இன்று இரண்டு பங்குச் சந்தைகளிலும் காலை 11.45 மணி முதல் நண்பகல் 12.30 வரை வர்த்தகம் நிறுத்தப்படும். மீண்டும் 12.30 மணியளவில் வர்த்தகம் தொடங்கி மாலை 4.15 வரை நடைபெறும்.

வெப்துனியாவைப் படிக்கவும்