மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் இன்று எந்த திருப்பமும் ஏற்படவில்லை!
பங்குச் சந்தைகளில் இன்று காலை முதல் வர்த்தகம் முடியும் வரை சென்செக்ஸ், நிஃப்டி பிரிவில் உள்ள பங்குகளின் விலை அதிகரிப்பதும் பிறகு குறைவதுமாக இருந்தது.
மற்ற பிரிவு பங்குகளின் குறியீட்டு எண் இன்றும் சரிந்தன.
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 22.90 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 16,608.01 ஆக குறைந்தது.
மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 161.45,சுமால் கேப் 266.42 பி.எஸ்.இ 500- 49.32 புள்ளிகள் சரிந்தன.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 18.75 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 4838.25 ஆக குறைந்தது.
இதே போல் தேசிய பங்குச் சந்தையில் நிப்டி ஜீனியர் 39.25, சி.என்.எக்ஸ் ஐ.டி 76.00 சி.என்.எக்ஸ் 100-18.55, சி.என்.எக்ஸ் டிப்டி 11.05,சி.என்.எக்ஸ் 500-32.40, சி.என்.எக்ஸ் மிட் கேப் 118.10, சி.என்.எக்ஸ் 50-55.40 புள்ளிகள் சரிந்தன. பாங்க் நிப்டி மட்டும் 93.10 புள்ளிகள் அதிகரித்தது.
இன்று காலையில் இருந்தே பங்குகளை விற்பனை செய்து லாப கணக்கை பார்க்க துவங்கியதால், அதிகரித்த குறியீட்டு எண்கள் குறைந்தன என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
சென்செக்ஸ் பிரிவில் உள்ள முக்கிய பங்குகளின் விலை பலமுறை அதிகரித்தது. இதனால் குறியீட்டு எண்களும் அதிகரித்தன. சென்செக்ஸ் அதிகபட்சமாக 16,966.72 வரை அதிகரித்தது. இதே போல் ஒரு நிலையில் 16,565 ஆக குறைந்தது.
நேற்று இருந்த நிலையை விட குறியீட்டு எண்கள் குறையாது என்று பலர் நினைத்தனர். ஆனால் கடைசி நேரத்தில் அதிக அளவு பங்குகளை விற்பனை செய்ததால் குறியீட்டு எண்கள் குறைந்தது.
பங்குச் சந்தையில் அதிக அளவு பங்கு வகிக்கும் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் அதிக அளவு பங்குகளை விற்பனை செய்ததும், உள்நாட்டு முதலீட்டாளர்களும் பங்குகளை விற்பனை செய்வதற்கு காரணமாக இருந்தது. நேற்று அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.1,268.67 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தனர்.
அமெரிக்க பொருளாதார நெருக்கடியுடன், டிசம்பர் மாத தொழில் துறை வளர்ச்சி 7.6 விழுக்காடாக குறைந்ததும், பங்குச் சந்தையின் குறியீட்டு எண்கள் குறைவதற்கு காரணமாக அமைந்தது. (சென்ற வருடம் டிசம்பரில் தொழில் துறை வளர்ச்சி 13.4 விழுக்காடு).
இன்று மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் பிரிவில் உள்ள 30 நிறுவனங்களில் 25 நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தது. 5 நிறுவனங்களின் பங்கு விலை அதிகரித்தது.