மும்பை தேசிய பங்குச் சந்தைகளில் இன்று மற்றொரு கருப்பு திங்களாக மாறியது!
பங்குச் சந்தைகளில் இன்று ரிலையன்ஸ் பவர் பங்குகள் பட்டியலிடப்படும், இதன் போக்கை வைத்துதான், பங்கு சந்தையின் ஏற்ற இறக்கம் இருக்கும் என்று சென்ற வாரமே எல்லா தரப்பினரும் கருதினர்.
அதே போல், இன்று ரிலையன்ஸ் பவர் பங்கு வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, இதன் விலை ஒதுக்கீட்டு விலையான ரூ.450 க்கும் குறைந்தது. இறுதியில் 17 விழுக்காடு நஷ்டத்தில் ரூ.372.50 ஆக முடிந்தது.
ரிலையன்ஸ் பவர் பங்கு விலையின் ஏமாற்றத்துடன், மற்ற நாடுகளின் பங்குச் சந்தைகளிலும் ஏற்பட்ட வீழ்ச்சியால் பல்வேறு தரப்பினரும் பங்குகளை அவசரமாக விற்பனை செய்ய ஆரம்பித்தனர். இதனால் தொடர்ந்து எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் சரிவை சந்தித்தன.
இந்த வருடத்தில் இது வரை இல்லாத அளவாக மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 17 ஆயிரத்திற்கும் குறைந்தது. இன்று மட்டும் 833.98 புள்ளிகள் சரிந்து குறியீட்டு எண் 16,630.91 ஆக முடிந்தது. வர்த்தகம் நடந்த போது சுமார் 1 மணியளவில் சென்செக்ஸ் 16,457.74 புள்ளிகளாக குறைந்தது.
இதற்கு முன் ஜனவரி 21 ந் தேதி சென்செக்ஸ் 1,408.35 புள்ளிகளும், ஜனவரி 22 ந் தேதி 875.41 புள்ளிகளும் குறைந்தது.
வளர்ந்த நாடுகளின் அமைப்பான ஜி7 நாடுகளின் கூட்டத்தில் சர்வதேச அளவில் கடன் நிலுவை நெருக்கடியால் பொருளாதாரம் வளர்ச்சி நெருக்கடிக்குள்ளாகும் என்று தெரிவிக்கப்பட்டதும், எல்லா நாடுகளின் பங்கு சந்தைகளின் வீழ்ச்சிக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
அமெரிக்க பொருளாதார நெருக்கடியுடன், பிரான்ஸ் வங்கியான சொஸைட்டி ஜெனரலியும் 600 மில்லியன் கடன் தள்ளுபடியை அறிவித்திருப்பது எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றியது போல் ஆகிவிட்டது. இது மேலும் நெருக்கடியை அதிகரித்தது.
மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 413.44,சுமால் கேப் 480.25,பி.எஸ்.இ 500- 368,64 புள்ளிகள் சரிந்தன.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 263.35 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 4857.00 ஆக குறைந்தது.
இதே போல் தேசிய பங்குச் சந்தையில் நிப்டி ஜீனியர் 528.35, சி.என்.எக்ஸ் ஐ.டி 4.90 பாங்க் நிப்டி 397.75, சி.என்.எக்ஸ் 100-258.90, சி.என்.எக்ஸ் டிப்டி 237.70, சி.என்.எக்ஸ் 500-233.15, சி.என்.எக்ஸ் மிட் கேப் 397.20, சி.என்.எக்ஸ் 50-208.25 புள்ளிகள் சரிந்தன.
இன்று மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் பிரிவில் உள்ள 30 நிறுவனங்களில் 25 நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தது. 5 நிறுவனங்களின் பங்கு விலை அதிகரித்தது.