சென்செக்ஸ் 1000 புள்ளிகள் உய‌‌ர்வு!

வெள்ளி, 25 ஜனவரி 2008 (15:40 IST)
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் இன்றைய வர்த்தகத்தில் ஆயிரம் புள்ளிகள் அதிகரித்தது.

மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே பங்குகளின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

பிற்பகல் உணவு இடைவேளைக்கு பிறகும் தொடர்ந்து பங்குகளின் விலைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

மதியம் 3.20 மணியளவில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 1,164.96 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 18,386 ஆக இருக்கின்றது.

இதே போல் மிட் கேப் 491.68, சுமால் கேப் 403., பி.எ‌‌ஸ்.‌ஸி-500 484.74 புள்ளிகள் அதிகரித்தது. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 359 புள்ளிகள் உயர்ந்தது. குறியீட்டு எண் 5392.45 ஆக இருந்தது. இங்கு மற்ற பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்தன.

இன்று பொதுத்துறை வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் வேலை நிறுத்தத்தினால் பங்கு சந்தை பாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

அந்நிய முதலீட்டு நிறுவனங்கள், உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் பங்குகளை வாங்குவதில் ஆர்வமாக இருந்தனர். இதனால் பங்கு விலை அதிகரித்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்