மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் கடந்த ஆறு நாட்களாக இருந்து வந்த நிலை இன்று மாறியது.
இன்று காலையில் வர்த்தகம் துவங்கும் போதே மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 719.37 புள்ளிகள் உயர்ந்து குறியீட்டு எண் 17,449.31 ஆக இருந்தது. தேசிய பங்குச் சந்தையின் நி்ஃப்டி 191 புள்ளிகள் உயர்ந்து குறியீட்டு எண் 5091 ஆக வர்த்தகம் துவங்கியது. இரண்டு பங்குச் சந்தைகளிலும் எல்லா பிரிவு பங்குகளின் விலையும் அதிகரித்தன.
அமெரிக்க ரிசர்வ் வங்கி நேற்று 0.75 (முக்கால் விழுக்காடு) விழுக்காடு வட்டியை குறைப்பதாக அறிவித்தது. இதன் எதிரொலியாக இன்று இந்தியா உட்பட மற்ற ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளிலும் பங்குகளின் விலைகள் அதிகரித்தன. இவைகளின் குறியீட்டு எண்களும் அதிகரித்தன.
இன்று மும்பை பங்குச் சந்தையின் காலை வர்த்தகத்தில் 770 பங்குகளின் விலை அதிகரித்தது. 629 பங்குகளின் விலை குறைந்தது. மும்பை பங்குச் சந்தை அமைந்துள்ள தலால் தெருவில் கடந்த ஐந்து நாட்களாக இருந்து வந்த சோகமும், இறுக்கமான நிலையும் மாறி பலரது முகத்தில் மகிழ்ச்சி காணப்பட்டது.
காலை 11 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 389.50 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 17,119.44 ஆக இருந்தது. மிட் கேப் 194.99, சுமால் கேப் 3.83, பி.எஸ்.இ-500 179.26 புள்ளிகள் அதிகரித்தது இருந்தது.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 139.35 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 5038.65 ஆக இருந்தது. மற்ற எல்லா பிரிவு பங்குகளின் விலையும் அதிகரித்து இருந்தது.
சர்வதேச சந்தைகளில் அமெரிக்க பங்குச் சந்தையின் குறியீட்டு எண்கள் குறைந்து இருந்தன. இதன் டோவ் ஜோன்ஸ் 128.11, நாஸ்டாக் 47.75, எஸ்அண்ட்பி 14.69 புள்ளிகள் குறைந்தது. மற்ற நாட்டு பங்குச் சந்தைகளில் சீனாவில் 180.76, ஹாங்காங்கில் 1,150.21, ஜப்பானில் 230.71, தென் கொரியாவில் 13.74 புள்ளிகள் அதிகரித்து இருந்தன.
ஆனால் சிங்கப்பூர் பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 1.21 புள்ளிகள் குறைந்து இருந்தது. மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பங்குகளின் விலை அதிக அளவு உயராவிட்டாலும், குறையாது என்ற நம்பிக்கை மார்க்கெட் வட்டாரங்களில் நிலவுகிறது.