பங்குச் சந்தை சரிவு!

புதன், 9 ஜனவரி 2008 (12:20 IST)
மும்பை பங்குச் சந்தையிலும், தேசிய பங்குச் சந்தையிலும் பெரும்பாலான பங்குகளின் விலை குறைந்தது. மும்பை சென்செக்ஸ் நேற்று 21 ஆயிரத்தை தாண்டி சாதனை படைத்ததது. ஆனால் இன்று பங்குகளின் விலைகள் தொடர்ந்து குறைந்து வருகின்றன.

மும்பை பங்குச் சந்தையில் எ‌‌ல்லா பிரிவு குறியீட்டு எண்களும் நேற்றைய இறுதி நிலவரத்தை விட குறைந்து இருந்தது. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்சி ஜூனிவர், தகவல் தொழில் நுட்ப பிரிவு தவிர மற்ற எல்லா பிரிவு குறியீட்டு எண்களுமே குறைந்து இருந்தன.

இந்திய பங்குச் சந்தை மட்டுமல்லாது அமெரிக்க பங்குச் சந்தையிலும் எல்லா முக்கிய குறியீட்டு எண்களும் குறைந்தன. ஹாங்காங் ப‌ங்குச் சந்தையிலும் பங்கு விலை குறைந்தது. ஜப்பானின் நிக்கி, சிங்கப்பூர் பங்குச் சந்தையின் பங்கு விலைகள் அதிகரித்தன.

மும்பை பங்குச் சந்தையில் காலை 11 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 79.02 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 20,794.31 ஆக இருந்தது. இதே போல் மிட் கேப் 108.35, சுமால் கேப் 265.63, பி.எஸ்.இ-500 55.11 புள்ளிகள் குறைந்தன.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 28.20 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 6259.65 புள்ளிகளாக இருந்தது.
தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர், தகவல் தொழில் நுட்பம், சி.என்.எக்ஸ் 100 பிரிவு குறியீட்டு எண்கள் மட்டும் அதிகரித்தன.

மிட் கேப் மற்றும் சுமால் கேப் பிரிவு பங்குகளின் விலை குறைய காரணம், இதில் முதலீடு செய்துள்ள சிறு முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பனை செய்ய துவங்கியுள்ளனர். இவர்கள் கூடிய விரைவில் வெளியிட உள்ள ரிலையன்ஸ் பவர் பங்குக்கு விண்ணப்பிக்க வசதியாக பங்குகளை விற்பனை செய்து ரூபாயை சேமிக்க துவங்கி உள்ளனர். இதனால் தான் இதன் விலைகள் குறைந்து வருகின்றன என்று வர்த்தகர்கள் கருத்து தெரிவித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்