உ.பி யில் வாட் அமல்: சரக்கு போக்குவரத்து நிறுத்தம்!

திங்கள், 31 டிசம்பர் 2007 (20:10 IST)
உத்தர பிரதேசத்தில் வாட் வரி விதிப்பை எதிர்த்து வியாபாரிகள், லாரி போக்குவரத்து நிறுவனங்கள் வேலை நிறுத்தம் செய்ய போவதாக அறிவித்துள்ளன.

உத்தர பிரதேச மாநில அரசு ஜனவரி 1 ந் தேதி முதல் மதிப்பு கூட்டு வரியை (வாட்) நடைமுறைக்கு வரும் என அறிவித்துள்ளது.

இதற்கு வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

வாட் வரியை அமல்படுத்துவதை எதிர்த்து வியாபாரிகள் நாளை கடை அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர். வியாபாரிகளுக்கு ஆதகவாக சரக்கு போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள லாரி நிறுவனங்களும் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்கின்றன. இவை சரக்கு போக்குவரத்தை நிறுத்துவதாக அறிவித்துள்ளன.

இதன்படி லாரி நிறுவனங்கள் சரக்கு அனுப்புவதற்கு பதிவு செய்வதை நேற்று முதல் நிறுத்தியுள்ளன. வியாபாரிகளின் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதை உத்தரபிரதேச உத்யோக் வியாபார் பிரதிநிதி மண்டல் என்ற வியாபாரிகள் கூட்டமைப்பின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான பன்வாரி லால் கன்சல் அறிவித்தார்.

அப்போது அவர், மாநில அரசு வியாபாரிகளின் பிரச்சனையை காது கொடுத்து கேட்க கூட தயாராக இல்லை. இதனால் வியாபாரிகள் கடை அடைப்பு செய்வதை தவிர வேறு வழியில்லை. நாங்கள் அண்டை மாநிலங்களில் உள்ளதை போல் வரிகளை குறைக்குமாறு தான் அரசை கேட்கின்றோம்.

ஆனால் மாயாவதி அரசு வியாபாரிகளின் பிரச்சனையை பற்றி கவலைப்படவில்லை.புதிய வாட் வரி விதிப்பு முறை தோல் தொழில், உணவு தானியம், ஆயத்த ஆடை தொழில்களை கடுமையாக பாதிக்கும். ஏனெனில் இவைகளுக்கு மாநில அரசு அறிவித்துள்ள வரி விகிதங்களை விட, இந்த தொழில்களுக்கு அண்டை மாநிலங்களில் குறைவான வரி விதிக்கப்படுகிறது.
அத்துடன் டில்லி, மற்றும் சில அண்டை மாநிலங்களில் ஆயத்த ஆடை, உணவு தானியம், தோல் பொருட்களுக்கு வரி விதிக்கப்படவில்லை. ஆனால் இவைகளுக்கு உத்தர பிரதேசத்தில் வரி விதிக்கப்பட உள்ளது.

வியாபாரிகள் மாநிலம் தழுவிய கடை அடைப்பு போராட்டம் நடத்துவதுடன்,பேரணியாக சென்று விற்பனை வரி அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள் என்று கூறினார்.

இந்த கூட்டமைப்பில் இணைந்துள்ள வியாபாரிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் வாட் வரியை எதிர்த்து மாநில சட்டமன்ற வளாகம் முன்பு மூன்றாவது நாளாக உண்ணாவிரதம் போராட்டத்தை தொடர்கின்றனர். நாளையும் உண்ணாவிரதம் இருக்கின்றனர்.
இத்துடன் மாநிலத்தின் பல பகுதிகளிலும் வியாபாரிகள் வாட் வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

அதே நேரத்தில் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து நிறுவனங்கள் தற்போதுள்ள வாட் வரியை திரும்ப பெறும் வரை நாளை முதல் லாரி, பஸ்களை இயக்குவதில்லை என அறிவித்துள்ளனர்.

புதிய வாட் வரி விதிப்பு முறைப்படி போக்குவரத்து தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களும் விநியோகஸ்தர்களாக கருதப்படுவார்கள். அவர்கள் படிவம் 14 முதல் 21 வரை உள்ள படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன் அவர்களின் வரவு-செலவு உட்பட எல்லா விபரங்களையும் எட்டு வருடத்திற்கு பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டுளளது. வாட் வரி விதிக்கப்பட்டுள்ள மற்ற 22 மாநிலங்களில் போக்குவரத்து துறைக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. உ.பியில் மட்டுமே போக்குவரத்து துறையும் வாட் வரி விதிப்பின் கீழ் கொண்டுவரப்படுகிறது என்று கூறி, போக்குவரத்து தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதே நேரத்தில் சமாஜ்வாதி கட்சியுடன் இணைந்த அகில இந்திய சமாஜ்வாதி வியாபாரிகள் சங்கத்தினர், மற்ற வியாபிரிகள சங்க தலைவர்களுக்கு நல்ல புத்தி வரவேண்டும் என்று நாளை அலகாபாத்தில் உள்ள சரஸ்வரி, கங்கை மற்றும் யமுனை நதி கரைகளில் புனித யாகம் வளர்க்கின்றனர்.

இது யாகம் வளர்ப்பது பற்றி அகில இந்திய சமாத்வாதி வியாபாரிகள் சங்க தேசிய தலைவர் ரத்யாசியாம் குப்தா கூறுகையில், நாங்கள் பெருமுயற்சி எடுத்தும் அரசுக்கு எதிராக வாட் வரி விதிப்பை எதிர்த்து போராட, எல்லா வியாபாரிகள் சங்கமும் ஒரணியில் திரட்ட முடியவில்லை. வாட் வரியை எதிர்த்து அரசுடன் ஒத்துழையைமை இயக்க போராட்டம் நடத்த வேண்டும். இதற்கு எல்லோரும் ஒரே அணியில் ஒரே இயக்கமாக திரளாமல் போராட்டத்தை நடத்த முடியாது. ஆனால் துரதிஷ்டவசமாக வியாபாரிகள் சங்கத்தின் தலைவர்கள் அவர்களின் சொந்த அரசியல் லாபத்தையே குறிக்கோளாக கொண்டு செயல்படுகின்றனர். இவர்களுக்கு நல்ல புத்தி வர வேண்டும் என்றே யாகம் வளர்க்கின்றோம் என்று கூறினார்.

புதிய வாட் வரி விதிப்பு பற்றி உ.பி.மாநில அரசு அதிகாரி கூறுகையில், மாநிலத்தில் புதிய வாட் வரியை அமல்படுத்த எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவிட்டன. புதிய வரி முறை முழுவதும் கணினி மயமாக்கப்பட்டுள்ளது. வியாபாரிகளும் போக்குவரத்து துறையினரும் நடத்தும் போராட்டம் அரசியல் ரீதியானது. உத்தர பிரதேசம் தான் வாட் வரியா கடைசியாக அமல்படுத்தும் மாநிலம் என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்