மும்பை பங்குச் சந்தையிலும், தேசிய பங்குச் சந்தையிலும் காலை வர்த்தகம் துவங்கிய போதே எல்லா பிரிவில் உள்ள பங்குகளின் விலைகளும் அதிகரித்தன.
ஆங்கில வருடத்தின் கடைசி நாளான இன்று, பங்குச் சந்தை உற்சாகத்துடன் துவங்கியது. பல அந்நிய நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் வரவு-செலவு கணக்குகளை, ஆங்கில வருட காலண்டர் அடிப்படையிலேயே கணக்கிடுகின்றன. கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைகளால், பங்குச் சந்தையில் அந்நிய முதலீட்டு நிறுவனங்களின் பங்கேற்பு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஏனெனில் சென்ற வாரம் முழுவதும் பங்குச் சந்தையில் பங்குகளின் விலை ஏற்ற இறக்கமாகவும், மந்த கதியிலும் இருந்தது. இந்நிலையில் இந்த வாரத்தின் முதல், ஆண்டு கடைசி நாள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
மும்பை பங்குச் சந்தையில் காலையில் வர்த்தகம் துவங்கிய ஐந்தாவது நிமிடத்திலேயே சென்செக்ஸ் 204.5 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 20,411.85 ஆக உயர்ந்தது.
இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 57.45 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 6137.15 ஆக இருந்தது. காலையில் வர்த்தகம் துவங்கிய நேரத்தில் அம்புஜா சிமென்ட், ரிலையன்ஸ் எனர்ஜி, ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ், ஹின்டால்கோ இன்டஸ்டிரிஸ் ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை அதிகளவு அதிகரித்து இருந்தது.
ஹெச்.டி.எப்.சி வங்கி, டாடா கன்சல்டன்சி ஆகிய இரு நிறுவனங்களின் பங்கு விலை மட்டும் குறைந்திருந்தது. இன்று எல்லா பங்குகளின் விலைகளும் அதிகரிக்கும். அதிகளவு குறைவதற்கு வாய்ப்பில்லை என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர். குறிப்பாக மீட் கேப், சுமால் கேப் பிரிவில் உள்ள பங்குகளின் விலை அதிகரிக்கும். இந்த பிரிவில் உள்ள 930 நிறுவன பங்குகளின் விலை வெள்ளிக்கிழமையன்று அதிக பட்சமாக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் காலையில் அதிகரித்த ஏற்றம் நாள் முழுவதும் தொடர்ந்து இருக்கும் என்பதை உறுதியாக கூறமுடியாது. சில தொழில் பிரிவு பங்குகளின் விலை குறையவும் வாய்ப்பு உள்ளது என்று மற்றொரு தரப்பு வர்த்தகர்கள் கருதுகின்றனர்.
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் காலை 10.30 மணியளவில் 206.88 புள்ளிகள் உயர்ந்து குறியீட்டு எண் 20,413.83 புள்ளிகளாக இருந்தது. மிட் கேப் 163.26, சுமால் கேப் 351.87, பி.எஸ்.இ-500 108.30 புள்ளிகள் அதிகரித்து இருந்தது.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 61.65 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 6141.35 ஆக இருந்தது. மற்ற எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்து இருந்தன.
இதே நிலை நாள் முழுவதும் தொடர வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது.