பங்குச் சந்தை 170 புள்ளிகள் உயர்வு!

Webdunia

வெள்ளி, 7 டிசம்பர் 2007 (19:23 IST)
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 170.13 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 19.60 புள்ளிகளும் அதிகரித்தன.

காலையில் பங்குச் சந்தையின் வர்த்தகம் தொடங்கிய போது சென்செக்ஸ் 20 ஆயிரம் புள்ளிகளை தாண்டி 20,063.17 புள்ளிகளாக இருந்தது. ஒரு நிலையில் சென்செக்ஸ் 20,094.56 புள்ளிகளாக உயர்ந்தது. ஆனால் இது நீண்ட நேரம் நிற்கவில்லை. பங்குகளின் விலைகள் சிறிது சிறிதாக குறைய தொடங்கின. மதிய உணவு இடைவேளைக்கு பிறகு நேற்றைய இறுதி நிலவரத்தை விட சென்செக்ஸ் 400 புள்ளி குறைந்தது. குறியீட்டு எண் 19,706.57 புள்ளிகளாக குறைந்தது.

இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி காலையில் வர்த்தகம் தொடங்கிய போது 5,963.60 புள்ளிகளாக தொடங்கியது. சிறிது நேரத்திலேயே 6 ஆயிரத்தை தாண்டி 6,042.10 புள்ளிகளாக உயர்ந்தது. இறுதியில் 5,975.30 புள்ளிகளில் முடிந்தது. இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட 19.60 புள்ளிகள் அதிகம்.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 11.80 புள்ளிகளும், சுமால் கேப் 18.46 புள்ளிகளும் குறைந்தன. ஆனால் பி.எஸ்.இ-500 37.27 புள்ளிகள் அதிகரித்தது. தேசிய பங்குச் சந்தையில் மிட்கேப் 50 தவிர மற்ற பிரிவு குறியீட்டு எண்கள் அதிகரித்தன.

மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் பிரிவில் உள்ள பங்குகளில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, மாருதி, என்.டி.பி.சி., ரான்பாக்ஸி, சத்யம், டி.சி.எஸ்., விப்ரோ, பார்தி ஏர்டெல், டி.எல்.எப்., ஹெச்.டி.எப்.சி., ஹிந்துஸ்தான் யூனிலிவர்,.சத்யம், எஸ்.பி.ஐ., ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை அதிகரித்தது.

அம்புஜா சிமென்ட், சிப்லா, கிராசிம், ஹின்டால்கோ, ஐ.டி.சி., மகேந்திரா அண்ட் மகேந்திரா, ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ், ரிலையன்ஸ் எனர்ஜி, பஜாஜ் ஆட்டோ, எல்.அண்ட்.டி. ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்