மும்பை பங்குச் சந்தை 74 புள்ளிகள் சரிவு!

Webdunia

செவ்வாய், 4 டிசம்பர் 2007 (20:16 IST)
பங்குச் சந்தைகளில் சில நாட்களாக அதிகரித்து வந்த பங்குகளின் விலை இன்று குறைந்தது. முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை விற்று இலாபம் அடையும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதால், பங்குகளின் விலைகள் குறைந்ததாக புரோக்கர்கள் தெரிவித்தனர்.

மும்பை பங்குச் சந்தையில் மாலையில் வர்த்தகம் முடிந்த பிறகு சென்செக்ஸ் 73.91 புள்ளிகள் குறைந்தது. இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 6.65 புள்ளிகள் குறைந்தது.

அதே நேரத்தில் மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 140.28 சுமால் கேப் 170.31 பி.எஸ்.இ-500 38.22 புள்ளிகள் அதிகரித்தன.
தேசிய பங்குச் சந்தையில் தகவல் தொழில் நுட்பம், வங்கி பிரிவு தவிர மற்ற பிரிவுகளின் குறியீட்டு எண்கள் அதிகரித்தன.
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் பிரிவில் உள்ள பங்குகளில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், அம்புஜா சிமென்ட், டி.எல்.எப்., ஹின்டால்கோ, எல்.அண்ட்.டி., டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், பி.ஹெச்.இ.எல்., இன்போசியஸ், ஹெச்.டி.எப்.சி. வங்கி, மகேந்திரா அண்ட் மகேந்திரா, விப்ரோ, இன்போசியஸ், ஐ.டி.சி. ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை அதிகரித்தன.

ரிலையன்ஸ் எனர்ஜி, ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ், எஸ்.பி.ஐ., பார்தி ஏர்டெல், ஹெச்.டி.எப்.சி., ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ரான்பாக்ஸி, டி.சி.எஸ்., பஜாஜ் ஆட்டோ, மாருதி, என்.டி.பி.சி., சிப்லா, ஓ.என்.ஜி.சி., டி.சி.எஸ்., சத்யம் ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தன.

வெப்துனியாவைப் படிக்கவும்